பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு அளித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
19 May,2021
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சாதாரண விடுப்பு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் சுமார் 30 ஆண்டுகள் சிறையில் இருந்துவருகின்றனர். ஏழு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசு ஒருமனதாக சட்டமன்றத்தில் 2018-ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசின் கருத்தைக் கோரியுள்ளார்.
இதற்கிடையில், பேரறிவாளவன் உடல்நிலையை கணக்கில் கொண்டும், அவருடைய தந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டதைக் கணக்கில் கொண்டும் அவருக்கு அவ்வப்போது பரோல் வழங்கப்பட்டது.
இந்தநிலையில், பேரறிவாளனுக்கு விடுப்புகோரி அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கைவைத்தார். இந்தநிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் இருந்துவரும் ஏ.ஜி. பேரறிவாளனுக்கு (சிறைக் கைதி எண் 7640) மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டுமென அவரது தாயார் டி.அற்புதம்மாள் தமிழக அரசுக்கு அளித்திருந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏ.ஜி.பேரறிவாளனுக்கு உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.