மகாராஷ்டிராவை புரட்டிப்போட்ட 'டவ் தே' புயல்!
18 May,2021
மகாராஷ்டிராவில் டவ் தே புயல் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. டவ் தே புயலால், தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்துள்ளது. பெருமளவில் சேதங்களையும் ஏற்படுத்தி சென்றுள்ளது. கேரளா முழுவதும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.
எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்தில் ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்தனர். கர்நாடகாவில் டவ் தே புயலால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட 73 கிராமங்கள் பாதிப்படைந்துள்ளன.
இதனிடையே மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவன் நகரில் அஞ்சல்வாடி பகுதியில் குடிசை வீடு ஒன்றின் மீது மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் , வீட்டில் இருந்த 17 மற்றும் 12 வயதுடைய 2 சகோதரிகள் பலியானார்கள் . இந்த சம்பவத்தில் அவர்களின் தாயாருக்கு படுகாயங்கள் ஏற்பட்டன .
அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார் . புயலை முன்னிட்டு தடுப்பூசி பணிகளை நிறுத்தி வைக்க மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது . இந்நிலையில் டவ் தே புயல் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாக மகாராஷ்டிரா மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் 9 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் சேதம் குறித்து மதிப்பீடு செய்து நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தப் புயலால் மகாராஷ்டிராவில் வீடுகள் பலவும் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன.