கொரோனா சிகிச்சைக்கு சுய மருத்துவம் - காஜியாபாதில் செயல்படுத்திய தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி
உத்தர பிரதேச மாநிலத்தின் எல்லை மாவட்டமான காஜியாபாத்தில் கொரோனா படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதி கையிருப்பில் இல்லை என அறிவித்து வந்த தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்தவரும் உத்தர பிரதேச மாநில பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியுமான செந்தில் பாண்டியன்.
தலைநகர் டெல்லியை அடுத்த அண்டை மாநில எல்லை மாவட்டமான காஜியாபாத் தேசிய தலைநகர் வலயத்துக்குள் உள்ளது. டெல்லிக்குள் வேலைக்காக வரும் பலர், தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் உள்ள காஜியாபாதில் இருந்து வருபவர்களாக உள்ளனர். இந்த மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48,356 ஆகவும் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 5,464 ஆகவும் உள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 330 ஆக உள்ளது.
இங்கு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் அங்கமாக கடந்த மே 4ஆம் தேதி முதல் இரு வாரங்களுக்கு அமல்படுத்தப்பட்ட பொது முடக்க கட்டுப்பாடுகள் மே 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த மாதம் காஜியாபாதில் மாவட்ட ஆட்சியர், தலைமை மருத்துவ அதிகாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட கொரோனா முன்கள பணியில் ஈடுபட்டிருந்த 50 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்தப் பின்னணியில் இங்கு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அதிகாரிகள் நியமனம்
உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அல்லது தாக்கம் உள்ள மாவட்டங்களாக மாநில தலைநகர் லக்னெளவும் காஜியாபாத்தும் உள்ளதால் அவற்றில் கொரோனா வைரஸ் தடுப்பு மேலாண்மை பணிகளை கவனிக்க சிறப்பு அதிகாரிகளை மாநில அரசு நியமித்துள்ளது.
இதில் லக்னெள மாவட்ட சிறப்பு அதிகாரியாக கேரளாவை சேர்ந்த ரோஷன் ஜேக்கப்பும், காஜியாபாத் மாவட்ட சிறப்பு அதிகாரியாக தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்பாண்டியனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் செந்தில்பாண்டியன், இந்திய ஆட்சிப்பணி 2002ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநில பிரிவைச் சேர்ந்தவர், மாநில அரசுப் பணியில் துறைச் செயலாளர் அந்தஸ்திலும் மத்திய பணியில் இணைச்செயலாளர் அந்தஸ்திலும் இருப்பவர்.
கொரோனா தடுப்புப் பணி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட இவர், முதல் பணியாக தமது முகாம் அலுவலகத்தை காஜியாபாத்திலேயே மாற்றிக் கொண்டார். அங்குள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் இருந்தபடி பணிகளை கவனித்து வரும் இவர் தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறார்.
உத்தர பிரதேச அரசு உத்தரவின்படி அம்மாநிலத்தில் கொரோனா சிகிச்சைக்காக படுக்கை வசதி கோருபவர்கள், ஒருங்கிணைந்த கோவிட் கட்டளை மையத்தின் மூலம் பதிவு செய்து கொண்டு, எங்கு படுக்கை வசதிகள், ஆக்சிஜன் படுக்கை வசதிகள் காலியாக உள்ளனவா, அங்கு பதிவு செய்து கொண்டு சிகிச்சைக்காக சேரலாம். மேலும், அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளும் அவற்றின் மொத்த படுக்கை வசதிகளில் 10 சதவீதத்தை அரசுவசம் ஒப்படைத்து நோயாளிகள் சிகிச்சைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
ஆனால், பல தனியார் மருத்துவமனைகள் அவற்றின் இணையதளங்களிலும் வாடிக்கையாளர் சேவை தொடர்பகம் மூலமாகவும் தங்களின் ஆக்சிஜன் படுக்கை வசதிகள், கொரோனா வார்டுகள் நிரம்பி வழிவதாக தொடர்ந்து கூறி வந்தன.
இதையடுத்து, தனியார் மருத்துவமனைகளில் கடந்த 10 நாட்களாக அதிகாரிகள் குழுவுடன் சென்று சோதனை நடத்திய செந்தில்பாண்டியன், அவற்றில் உள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் படுக்கை வசதிகள், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கை வசதிகள் போன்றவற்றை நோயாளிகள் வாரியாக கணக்கெடுத்தார்.
இந்த கணக்கெடுப்பில், தனியார் மருத்துவமனைகள் அரசு உத்தரவின்படி இலவசமாக 10 சதவீத படுக்கை வசதிகளை வழங்காமல் அவை நிரம்பி வழிவதாக பொய் கூறி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மருத்துவமனை நிர்வாகங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி செந்தில்பாண்டியன் நடவடிக்கை எடுத்தார்.
பொய் கணக்கு காட்டிய மருத்துவமனைகள்
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அரசு உயரதிகாரிகள் தங்களுடைய மருத்துவமனைகளுக்கு வந்து சோதனை நடத்த மாட்டார்கள் என்ற எண்ணத்தில் மருத்துவமனை நிர்வாகங்கள் இருந்துள்ளன. ஏற்கெனவே கொரோனா பாதிப்புக்காக தங்களிடம் சேர்ந்த நோயாளிகள் படுக்கை வசதிகளை பெற்றிருப்பதாக அந்த மருத்துவமனைகள் கணக்கு காட்டி வந்தன. அவர்கள் டிஸ்சார்ஜ் ஆன பிறகும் அந்த மருத்துவ படுக்கை வசதிகள் காலியாக இல்லை என்று அவை சாதித்து வந்துள்ளன. இனி அப்படி அரசை ஏமாற்றி எதுவும் செய்ய முடியாத வகையில் எங்களுடைய கணக்கெடுப்பை தினசரி அடிப்படையில் தொடருகிறோம்," என்று தெரிவித்தார்.
காஜியாபாதில் பல்வேறு தனியார் மருத்துவமனைகள் தங்களுடைய படுக்கை வசதிகளில் சிலவற்றை மாவட்டத்திலும் அரசியல் துறையிலும் செல்வாக்குள்ள பிரமுகர்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கியிருப்பதாகவும், கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்குக் கூட கொரோனா படுக்கை வசதி வழங்கி வருவதும் அதிகாரிகள் சோதனையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து காஜியாபாத் முனிசிபல் சுகாதார அதிகாரி மிதிலேஷ் கூறும்போது, "மருத்துவமனைகள் தங்களுடைய உண்மையான படுக்கை வசதி தகவல்களை வெளியிடாமல் பணத்துக்காக அவற்றை மறைப்பது தவறானது," என்று குறிப்பிட்டார். அவசியம் ஏற்பட்டால் மருத்துவமனையின் நகராட்சி உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
காஜியாபாதில் தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் உள்ள பல தனியார் மருத்துவனைகளில் டெல்லி குடியிருப்புவாசிகளே சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.
ஆனால், குறிப்பிட்ட மாவட்ட குடியிருப்புவாசிகள்தான் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என சட்டம் கூறவில்லை. அதனால், எவரும் எங்கும் தங்கி சிகிச்சை பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி செந்தில் பாண்டியனின் நடவடிக்கையால், கடந்த மே 9ஆம் தேதி நிலவரப்படி தனியார் மருத்துவமனைகளில் அரசுக்காக வழங்கவிருந்த ஆறு தீவிர சிகிச்சை பிரிவு படுக்கை வசதிகளின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்திருக்கிறது. 27 ஆக்சிஜன் படுக்கைகள் 44 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த மே 11ஆம் தேதி தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கை 22 ஆகவும் வென்டிலேட்டர் வசதியுடைய படுக்கைகள் இரண்டாகவும் ஆக்சிஜன் படுக்கைகள் 48 ஆகவும் உயர்ந்திருக்கிறது.
கொரோனா பாதிப்புடையவர்கள், வைரஸ் அறிகுறி தென்பட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் செந்தில்பாண்டியன் பிபிசி தமிழிடம் விளக்கினார்.
"கொரோனா வைரஸ் அறிகுறி எவை என்பதை ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகள் சுகாதாரத்துறை அமைச்சகம் வாயிலாக விளம்பரப்படுத்தியிருக்கின்றன. பொது தளங்களிலும் அவை உள்ளன. எனவே அந்த அறிகுறிகளில் எவையேனும் தங்களுக்கு இருப்பது தெரிய வந்தால், உடனே பாதிக்கப்பட்டவர் பரிசோதனை மையத்துக்கு சென்று தங்களை சோதித்துக் கொள்ள வேண்டும் என்று கூட கிடையாது அல்லது பரிசோதனை முடிவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமும் கிடையாது. முதல் நாள் அறிகுறி தென்பட்டவுடனேயே அந்த நோயாளி சில அடிப்படை மருந்துகளை எடுத்துக் கொள்ளத் தொடங்கலாம்," என்றார்.
ஸ்விகி, ஸொமேட்டோ மூலம் டெலிவரி
கொரோனா தொற்றாளர்களுக்கு அரசு வழங்கும் மருத்துவ பாக்கெட்டுகளை தயாரிக்கும் சுகாதார அலுவலர்கள்.
"காஜியாபாத்தை பொறுத்தவரை, கொரோனா நோயாளி பரிசோதனை செய்து கொள்ளாவிட்டாலும் அவருக்கு வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்தால், அவருக்கு அடிப்படை மருந்து கிட் ஒன்றை வழங்குகிறோம். ஒவ்வொரு நாளும் இதுபோல, சுமார் ஐந்தாயிரம் கிட்டுகளை நாங்கள் மக்களுக்கு வழங்குகிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்தால், அந்த தொற்றாளர் எப்படி வெளியே நடமாடுவார், அவர் எப்படி மருந்து கிட்டுகளை பெற முடியும் என கேட்டபோது, "அறிகுறி இருப்பது தெரிய வந்தால், அவர் மாவட்ட கொரோனா கட்டளை மையத்தை தொடர்பு கொண்டு தங்களுடைய விவரத்தை தெரிவித்தால் போதும். அவர்களுக்கான மருந்து கிட்டுகளை அவசரகால தன்னார்வலர் குழு, பரிசோதனை மாதிரி சேகரிப்பு அலுவலர், கிராமப்புறங்கள் என்றால் பஞ்சாயத்து செயல் நியமிக்கும் முகவர்கள் மூலம் வழங்குகிறோம். இந்த பணியில் ஸ்விகி, ஸொமேட்டோ ஊழியர்களையும் ஈடுபடுத்துகிறோம். அவர்கள் தொற்றாளரின் வீட்டு வாயிலில் இந்த கிட்டுகளை போட்டு விட்டுச் செல்வார். பிறகு, கட்டளை மைய அலுவலர் அந்த மருந்துகளை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகளை வைரஸ் தொற்றாளருக்கு வழங்குவார்," என்று செந்தில்பாண்டியன் தெரிவித்தார்.
எங்களுடைய நோக்கம் எல்லாம் ஆரம்பநிலையிலேயே கொரோனா வைரஸ் வீரியம் அடையாமல் தடுக்கப்பட வேண்டும். அதன் வீரியம் குறைந்தால் ஆக்சிஜன் படுக்கை வசதிகளின் தேவையை குறைக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவர் இந்த மாவட்டத்தின் கொரோனா தடுப்புப் பணி சிறப்பு அதிகாரியாக வந்தது முதல் இதுவரை சுமார் 50 ஆயிரம் மருத்துவ கிட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பிபிசி தமிழ் அறிந்தது.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கான மருத்துவ சிகிச்சை எவ்வாறு வழங்கப்படுகிறது என கேட்டபோது, "இந்தியா முழுவதும் சீரான மற்றும் ஒரே மாதிரியான மருந்துகளே கொரோனா வைரஸ் எதிர்ப்பு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுகிறது. சிலருக்கு நோய்த்தொற்று தாக்கத்தை பொறுத்து வேறு சில மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பர். காய்ச்சல், வறட்டுத் தொண்டை, இருமல், சுவையுணர்வில்லாத நிலை, நுகர்தலில் ஏற்படும் சிக்கல், வயிற்று உபாதை அல்லது வாந்தி வருதல் போன்றவை கொரோனாவுக்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகளில் எவை இருந்தாலும் ஆர்டி-பிசிஆர், சிடி ஸ்கேன் போன்றவை எடுக்கவோ அவற்றின் முடிவுக்காகவோ காத்திருக்க வேண்டாம். கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் எட்டு மருந்துகளை எடுத்துக் கொள்ள தொற்றாளருக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அவை சரியான முறையில் நோயாளிகளுக்கு கிடைப்பதை அதிகாரிகளான நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்," என்று செந்தில்பாண்டியன் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளையும் அவர் விளக்கினார்.
கொரோனா சிகிச்சைக்கு வீட்டிலேயே சுய மருத்துவம்
கொரோனா
அறிகுறி தோன்றியவுடனேயே 'ஐவெர்மெக்டின் 12' என்ற மாத்திரையை தினமும் காலை உணவுக்கு முன்பாக ஒருவேளை என்ற வகையில் மூன்று நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
'அஸித்ரோமைசின் 500' மாத்திரையை உணவுக்குப் பிறகு ஒரு வேளை என்ற வகையில் மூன்று நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
'டொக்ஸி 100' என்ற மாத்திரையை உணவுக்கு பிறகு ஒரு வேளை என்ற வகையில் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
'குரோசின் 650' மாத்திரையை உணவுக்கு முன்பு என்ற வகையில், காலை சிற்றுண்டிக்கு முன்பு, மதிய உணவுக்கு முன்பு, மாலை ஒருமுறை, இரவு உணவுக்கு முன்பு என நான்கு வேளை என்ற வகையில் மூன்று நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
நான்காவது நாளில் காய்ச்சல் அல்லது உடல் சோர்வு அல்லது வலி இருந்தால் தொடர்ந்து 'குரோசின் 650' மாத்திரையை தொடரலாம்.
'லிம்ஸீ 500எம்ஜி' என்ற வைட்டமின் சி மாத்திரை மற்றும் ஸின்கோனியா 50எம்ஜி என்ற இரும்புச்சத்து மாத்திரையை சிற்றுண்டிக்கு முன்பு, மதிய உணவுக்கு முன்பு, இரவு உணவுக்கு முன்பு என மூன்று வேளை, 10 நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
'கால்ஸிரோல்' சாஷெட் வாரம் ஒரு முறை என்ற வகையில், ஆறு வாரங்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மாதம் ஒரு முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
என்னென்ன சாதனங்கள் அவசியம்?
ஆவி பிடிக்கும் ஸ்டீம் சாதனம், ஆக்சிஜன் அளவை பரிசோதிக்கும் ஆக்சிமீட்டர், வெப்பநிலையை பரிசோதிக்கும் தெர்மோமீட்டர்
இன்றைய காலகட்டத்தில் சில வகை மருத்துவ சாதனங்களை வீட்டில் அத்தியாவசியமாக வைத்திருப்பது சிறந்தது என்று கூறிய அவர், அவை என்னென்ன என்றும் விவரித்தார்.
கொரோனா தொற்றாளர்கள், ஆக்சிஜன் அளவை கணக்கிடக்கூடிய ஆக்ஸிமீட்டர், உடல் வெப்பநிலையை பரிசோதிக்க தெர்மோமீட்டர், ஆவி பிடிக்க உதவும் ஸ்டீமர் போன்றவற்றை வைத்திருப்பது நல்லது.
தினமும் 3-4 லிட்டர் வரை தண்ணீர் குடியுங்கள், எட்டு மணி நேரத்துக்கும் குறைவில்லாமல் உறங்குங்கள், காலையில் எழுந்தவுடன் 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்யுங்கள், இஞ்சி, வேப்பிலை கலந்த சுடுநீர் அல்லது கொதிநீரில் ஆவி பிடித்து நுகருங்கள். இருமல் அதிகமாக இருந்தால் இருமல் மருந்து மருத்துவ பரிந்துரைப்படி பருகுங்கள். வயிற்றுப்பகுதி நோக்கி உறங்குங்கள்.
மூச்சு விட சிரமம் ஏற்பட்டால், டெரிஃபில்லின் ரெட்டார்ட் 150எம்ஜி ஒரு மாத்திரையை காலையிலும் மாலையிலும் எடுத்துக் கொள்ளுங்கள்.
"உங்களுக்கு நீரிழிவு நோய் இல்லையென்றால், 'வைசொலோன்' மாத்திரை,' ஓம்னாகொர்டில்' அல்லது 'டெக்ஸோனா' மாத்திரையை காலை மற்றும் மாலையில் எடுத்துக் கொள்ளுங்கள். காஜியாபாதில் இதை எங்களால் சாதிக்க முடிகிறது. அதன் விளைவாக கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை சரியாக கடைப்பிடித்தால் வீட்டில் இருந்தபடியே எல்லோராலும் கொரோனாவை விரட்டி விட முடியும்," என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் செந்தில்பாண்டியன்.