ரூ.6.22 லட்சம் கோடி அனுப்பிய வெளிநாடு வாழ் இந்தியர்கள்
13 May,2021
கடந்த ஆண்டு நிலவரப்படி, வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பங்களுக்கு, 6.22 லட்சம் கோடி ரூபாய் அனுப்பியுள்ளனர்.
வெளிநாடுகளில் பணிபுரிவோர் தங்கள் தாய் நாட்டில் உள்ள குடும்பத்தாருக்கு அனுப்பிய தொகை குறித்த அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த 2020ல், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள், இந்தியாவுக்கு 6.22 லட்சம் கோடி ரூபாய் அனுப்பியுள்ளனர். இது 2019ல் அனுப்பிய, 6.24 லட்சம் கோடி ரூபாயை விட, 0.2 சதவீதம் குறைவு.
ஐக்கிய அரபு எமிரேட்சில் பணிபுரியும் இந்தியர்கள் அனுப்பிய தொகையில், 17 சதவீதம் குறைந்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட இதர நாடுகளில் இருந்து அதிக தொகை அனுப்பப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியும் சீனர்கள், 2020ல் தங்கள் தாய் நாட்டிற்கு, 4.46 லட்சம் கோடி ரூபாய் அனுப்பியுள்ளனர். அடுத்த இடங்களில் மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், எகிப்து, பாக்., பிரான்ஸ், வங்கதேசம் ஆகியவை உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.