இந்தியாவில் கொரோனா பரவலுக்கு காரணம் என்ன?
13 May,2021
கொரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வந்து விட்டதாக தவறாக கணித்து, கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டதே, இந்தியாவில் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இருப்பதற்கு முக்கிய காரணம்' என, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொற்றுநோய் சிகிச்சை நிபுணர், டாக்டர் ஆன்டனி பாசி கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக, அமெரிக்க பார்லி.,யின் சுகாதாரத் துறை நிலைக் குழுவில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் பரவும் இரண்டாவது அலைக்கான காரணம், அது மற்ற நாடுகளுக்கு கற்றுத் தரும் பாடம் குறித்து, எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, அமெரிக்க அதிபரின் ஆலோசகரும், பிரபல தொற்றுநோய் சிகிச்சை நிபுணருமான, டாக்டர் ஆன்டனி பாசி கூறியதாவது:இந்தியாவில் முதலாவது அலை முடிவுக்கு வந்து விட்டதாக கருதி முன்னதாகவே கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டன.மக்களும் அலட்சியமாக செயல்பட்டனர். ஆனால், அப்போதுதான், முதலாவது அலை உச்சத்தில் இருந்துள்ளது. அதன் விளைவுதான், இந்தியாவில் தற்போது இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இருப்பதற்கு காரணம்.
இது நமக்கு கற்றுத் தரும் பாடம். தொற்று நோய்களை எப்போதும் அசாதாரணமாக நினைத்து விடக் கூடாது. இதற்கு முன் பல நோய்களை கட்டுப்படுத்திவிட்டோம்; தடுப்பூசி கண்டுபிடித்து விட்டோம் என, சாதாரணமாக இருந்து விட்டோம்.அதனால் தான், மருத்துவ வசதிகளை, கட்டமைப்புகளை நாம் அதிகரிக்கவில்லை. இந்தியாவில் தற்போது ஆக்சிஜன், மருந்து உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்கு இதுவே காரணம்.
மேலும், நம்முடைய நாட்டை மட்டும் பாதுகாத்தால் போதாது. உலகில் ஏதாவது ஒரு மூலையில் இருந்தாலும், கொரோனா போன்ற வைரஸ் மற்ற இடத்துக்கும் பரவும் என்பதை உணர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்