பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் மீது பாய்ந்த வழக்கு: காரணம் என்ன?
11 May,2021
தமிழகத்தில் நேற்று முதல் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அந்த விதிமுறைகளை மீறியதாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நேற்று முதல் முழு ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த நிலையில், பொதுமுடக்க விதிகளை மீறியதாகக்கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தலைமை நிலையச் செயலாளர் மகாலிங்கம் உள்பட 250 பேர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கூடுதல், அரசு உத்தரவை மீறுதல், உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய் பரப்பக்கூடிய வகையிலான செயலில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக அதிமுக சார்பில் கூட்டத்திற்கு அனுமதி கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்ட நிலையில் அதற்கு பொலிஸார் அனுமதி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.