அதிகரிக்கும் கொரோனா: அமெரிக்கா எச்சரிக்கை!
11 May,2021
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப் படி, இந்திய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாதிப்பைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பினும், பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இன்னும் 2 வாரத்தில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் உச்சத்தை தொடுமென அமெரிக்க ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் சுகாதார மதிப்பீடு ஆய்வு நிறுவனமான ஐ.எச்.எம்.இ வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்னும் 2 வாரத்தில் பாதிப்பு உச்சத்தை தொடும்.
அப்போது உயிரிழப்போர் எண்ணிக்கை 850 ஆக அதிகரிக்கும். முகககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் மட்டுமே பாதிப்பை கட்டுப்படுத்த முடியும். தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசி செலுத்திய நபர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை இருக்காது என்றும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் இரண்டு அல்லது மூன்றாம் வாரத்தில் பாதிப்பு உச்சத்தை தொடும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.