இந்தியாவில் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்திற்கு மத்தியில், உத்தரப்பிரதேசத்திலிருந்து கங்கை நதியில் உடல்கள் தூக்கி எறியப்பட்டிருப்பதாக பீகார் அரசு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சுமார் 100 உடல்கள், பீகாரில் பாயும் கங்கை நதியில் மிதக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்து வருகின்ற நிலையில், மயானங்களும் மயானத்தில் உடலை எரியூட்டுவதற்காக மணிக்கணக்கில் குடும்பத்தினர் வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், கங்கை நதியில் அழுகிய நிலையில் 50 முதல் 100 உடல்கள் வரை மிதந்து கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உடல்கள் அனைத்தும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் என வெளியாகி இருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த உடல்கள் 5 முதல் 7 நாட்கள் வரை தண்ணீரில் ஊறியிருக்கலாம் எனவும் உடல் முழுவதும் சிதைந்து மிக மோசமான நிலையில் இருந்ததாகவும், ஆற்றங் கரைகளில் ஒதுங்கிய உடல்களை நாய்கள் கடித்துக் கொண்டிருந்ததாகவும் பகுதி வாசிகள் தெரிவித்தனர்.
பீகாரின் பக்ஸர் மாவட்டம் உத்தரப்பிரதேசத்தின் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.
இதனிடையே கங்கை நதியில் மிதந்து வந்த உடல்கள் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்தவை என பீகார் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கங்கைநதிக்கரையில் பல்வேறு உத்தரப்பிரதேச மாவட்டங்கள் அமைந்துள்ளன.
இவை கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களா? என்பது தெரியாத நிலையில், அவற்றிற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது வரை 15 உடல்களை கைப்பற்றி, குறித்த உடல்களை பாதுகாப்பாக அடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து உள்ளூர்வாசிகள் கூறுகையில், இந்த உடல்கள் அருகாமையில் இருக்கும் கிராமங்களைச் சேர்ந்தவர்களால் நதியில் தூக்கி எறியப்பட்டவையாக இருக்கலாம்.
சிகிச்சை அளிக்கப்படாமல் வீட்டிலேயே இறப்பவர்களின் உடல்களை நதியில் தூக்கி எறிந்திருக்கலாம் என கூறினர்.
எனினும், இதன் காரணமாக சுற்றுப்புற கிராமத்தினருக்கு தொற்று நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.