கொரோனா 2வது அலை: சன் டிவி நிறுவனம் ரூ. 30 கோடி நிவாரணம்!
10 May,2021
கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவிவரும் நிலையில் நிவாரணப் பணிகளுக்காக சன் தொலைக்காட்சி நிறுவனம் ரூ.30 கோடி வழங்கியுள்ளது.
கொரோனா தொற்றின் 2வது அலை இந்தியாவின் அதிகரித்து வருகிறது. சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரும் தொற்று பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்ற வீரர்களில் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து போட்டி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் முதல் அலையின்போது ஏராளமானோர் பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்திருந்தனர். அதேபோது தற்போதும், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக கிரிக்கெட் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள், தொழில் நிறுவனங்கள் நன்கொடை வழங்கி வருகின்றன. இந்நிலையில், பல்வேறு மொழிகளில் இயங்கிவரும் சன் தொலைக்காட்சி நிறுவனம் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக ரூ.30 கோடி நன்கொடை வழங்கியுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பு திட்டங்களுக்கு இந்த நிதி செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள் வாங்க இந்த நிதி செலவிடப்படும் என சன் தொலைக்காட்சி நிர்வாகம் கூறியுள்ளது.