ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்துக்கு உட்பட்ட கீர்வா கிராமத்தில் கொரோனா பாதித்த நபர் ஒருவர் கடந்த மாதம் 21-ந்தேதி உயிரிழந்தார்.
அவரது உடல் அடக்கத்தில் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததுடன், இறந்தவரின் உடலை பிளாஸ்டிக் பையில் இருந்து வெளியே எடுத்து பலரும் தொட்டதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்துக்குப்பின் அடுத்த 2 வாரங்களில் அங்கு 21 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனினும் உயிரிழந்த 21 பேரில் 3 அல்லது 4 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் என்றும் கூறியுள்ள அதிகாரிகள் உயிரிழப்பு நிகழ்ந்த குடும்பங்களை சேர்ந்த 147 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
அந்த கிராமம் முழுவதும் தற்போது கிருமிநாசினி தெளித்து தூய்மைப்பணிகள் நடத்தப்பட்டு வருவதாகவும், மக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் கூறினர். எனினும் இந்த தொடர் உயிரிழப்புகள் சிகார் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.
மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்க கொரோனா உறுதிச் சான்றிதழ் காட்டாயமில்லை:
மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிப்பதற்கு கொரோனா பாதிப்பை உறுதி செய்யும் சான்றிதழ் சமா்ப்பிக்க வேண்டியது கட்டாயமில்லை எனறு மத்திய அரசு அறிவித்துள்ளதாக தினமணியில் செய்தி பிரசுரமாகியுள்ளது.
மேலும், வேறு நகரங்களைத் சோ்ந்தவா்களாக இருந்தாலும் அவா்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் சிகிச்சை மறுக்கப்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு, மாநில அரசு, தனியார், கொரோனா சிறப்பு மருத்துவமனைகளுக்கு புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:
கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளை தனி மையங்களில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் அனுமதி பெற கொரோனா பாதிப்பை உறுதி செய்யும் சான்றிதழ் அளிக்க வேண்டியது கட்டாயமில்லை.வேறு நகரத்தைச் சோ்ந்தவா் என்ற காரணத்தாலும், தகுந்த அடையாள அட்டை இல்லை என்ற காரணத்தாலும் யாருக்கும் சிகிச்சை அளிக்க அனுமதி மறுக்கக் கூடாது. நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
மருத்துவமனையில் சோ்ந்து சிகிச்சை பெற தேவையில்லாதவா்கள் படுக்கைகளை அபகரித்துக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். புதிய வழிகாட்டி நெறிமுறைகளின் அடிப்படையிலேயே குணமானவா்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும்.
மத்திய அரசின் இந்தப் புதிய நெறிமுறைகளை அனைத்து மருத்துவமனைகளும் மூன்று நாள்களில் பின்பற்றும் வகையில் அனைத்து மாநில தலைமைச் செயலா்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா சிறு அறிகுறிகள் உள்ளவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பள்ளி கல்லூரி விடுதிகள், ஹோட்டல்கள், பள்ளிகள், விளையாட்டு அரங்கங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் கொரோனா பாதுகாப்பு மையங்களை ஏற்படுத்தலாம்.
கொரோனா சுகாதார மையத்தை உருவாக்கி பிற நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கலாம். இந்த மருத்துவமனைகள் தனி கட்டடத்திலோ, முழு மருத்துவமனையிலோ தனியாக நுழைவாயில், வெளியேறும் வழி ஆகியவற்றை வைத்து நடத்த வேண்டும்.
கொரோனா நோயாளிகளுக்கென நடத்தப்படும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி, செயற்கை சுவாசக் கருவி ஆகியவற்றை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
லூதியானா சாலைகளில் 'சாக்ஸ்' விற்ற சிறுவனுக்கு பஞ்சாப் முதல்வர் உதவி
சாலைகளில் சாக்ஸ் விற்றுக் கொண்டிருந்த இளஞ்சிறுவன் ஒருவனுக்கு கல்வி கிடைக்க பஞ்சாப் முதல்வர் வழி செய்துள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் நெரிசல் மிக்க சாலைகளில் சிக்னல்களில் வாகனங்கள் நிற்கும் போது, ஓட்டுநர்களிடம் காலில் அணியும் சாக்ஸ் விற்கும் 10 வயது சிறுவன் வன்ஷ் சிங். குடும்ப சூழல் காரணமாக பள்ளிப் படிப்பை 2-ம் வகுப்புடன் நிறுத்திவிட்டான்.
சிலர் சாக்ஸ் விற்கும் போது, சிலர் அதற்குண்டான பணத்துடன் அதிகமாக பணம் கொடுத்துள்ளனர். அதை வாங்க வன்ஷ் சிங் மறுத்துள்ளான். அத்துடன், சாக்ஸ் வாங்காமலேயே சிலர் பணம் கொடுத்துள்ளனர். அதையும் அவன் வாங்கவில்லை.
சிக்னலில் நின்ற ஒருவர் அவரிடம் சாக்ஸ் வாங்குவது போல் பேச்சு கொடுத்து பள்ளி படிப்பு போன்ற விவரங்களை கேட்டுள்ளார். அதற்கு அவர் பதில் சொல்வதை காணொளிப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அந்த காணொளி வைரலாக பரவி, தற்செயலாக அந்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் பார்வையிலும் பட்டது.
உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொலைபேசியில் முதல்வர் பேசினார். அத்துடன் அச்சிறுவன் வன்ஷ் சிங்கிடமும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பேசினார். இது தொடர்பான காணொளி முதல்வர் அமரீந்தர் சிங் ட்விட்டர் பதிவில் வெளியானது.
அக்காணொளிப் பதிவில் முதல்வர் பேசும்போது, ''உன் குடும்பத்துக்கு நான் உதவி செய்கிறேன். கவலைப்படாதே, உன் குடும்ப செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறேன். நீ பள்ளிக்கு சென்று நன்றாகப் படி. உன்னை பள்ளியில் சேர்க்க மாவட்ட ஆட்சியரிடம் பேசுகிறேன்'' என உறுதி அளிக்கிறார். அத்துடன், சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும் அளித்துள்ளார்.
இந்த காணொளி வைரலானது. அதை பார்த்த பலர் முதல்வர் அமரீந்தர் சிங்கை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளத்தில் ஒருவர் கருத்து வெளியிடுகையில், ''இதேபோல் பஞ்சாப் மாநிலம் முழுவதும் பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்துள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டிருக்கிறது