தமிழக முதல் அமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்பு: கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
07 May,2021
சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார்.
தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அப்போது கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சரான மு.க.ஸ்டாலினை அறிவித்ததுடன் பதவி ஏற்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.
இதைத்தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் ஓ பன்னீர்செல்வம், தனபால் ஆகியோர் பங்கேற்றனர்.
காலை 9 மணியளவில் கவர்னர் மாளிகை வந்த மு.க ஸ்டாலின், கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். பின்னர், அமைச்சர்களை கவர்னருக்கு மு.க ஸ்டாலின் அறிமுகம் செய்துவைத்தார். இதையடுத்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது.
இதன்பின்னர், தமிழக முதல் அமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்... எனக்கூறி மு.க ஸ்டாலின்பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். மு. க ஸ்டாலினுடன் அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.