நாட்டில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,12,262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவின் முதல் அலையில் காய்ச்சல், இருமல் மற்றும் மயக்கம் வருதல் உள்ளிட்ட பொதுவான பாதிப்புகள் காணப்பட்டன. தவிர, வாசனை மற்றும் சுவை இழப்பு போன்ற பிற அறிகுறிகளும் தென்பட்டன.
இதற்காக தொடக்க காலத்தில் ஹைட்ராக்சி குளோரோ குயினோன் என்ற மருந்து பயன்படுத்தப்பட்டது. பின்னர் ரெம்டெசிவிர் பரிந்துரைக்கப்பட்டது. இதுதவிர வேறு சில மருந்துகளும் பரிந்துரைக்கப்பட்டன. இதனால் நோய் பாதிப்பு ஓரளவு குறைந்தது.
இதன்பின்னர், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் புதுவகையான மரபணு உருமாறிய வைரசுகளால் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கின.
எனினும், இந்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் பாதிப்பு விகிதம் சரிவை நோக்கி சென்றது. ஆனால், கோடை காலத்தில் அதுவும் ஏப்ரல் முதல் வாரத்தில் உச்சமடைய தொடங்கிய பாதிப்பு எண்ணிக்கை இன்று வரை தொடர்ந்து நீட்சியடைந்த வண்ணம் உள்ளது.
இதனை தடுக்கும் வகையில் கோவேக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட உள்நாட்டு உற்பத்தியான தடுப்பூசிகள் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும், கொரோனா வைரசின் 2வது அலையில் பாதிப்புகள் தீவிரமடைந்து வருகின்றன.
இந்த முறை, முதல் அலையில் காணப்பட்டது போல் அல்லாமல், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து போவது அதிகரித்து காணப்படுகிறது. இதனால், நாட்டில் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சூழல் காணப்படுகிறது.
இவற்றில் இளம் வயதினரே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது. ஆனால், லேசான பாதிப்புகள் அல்லது அறிகுறிகளற்ற நிலையே அவர்களிடம் காணப்படுகின்றன. இந்த புதுவகை வியாதிக்கு ஹேப்பி ஹைப்போக்சியா என பெயரிட்டு உள்ளனர்.
ஹேப்பி ஹைப்போக்சியா என்றால் என்ன என்று காண்போம். ரத்தத்தில் குறைந்த ஆக்சிஜன் அளவு இருப்பது ஹைப்போக்சியா எனப்படுகிறது. நல்ல ஆரோக்கியமுள்ள நபருக்கு ரத்த ஓட்டத்தில் ஆக்சிஜன் அளவு 95%க்கு கூடுதலாக இருக்கும்.
ஆனால், இளம் வயது கொண்டோரை அதிகம் தாக்கும் இந்த வகை வியாதியால், நோயாளிகளுக்கு தங்களுடைய ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து போனதே தெரியாமல் இருக்கும்.
நோய் பாதிப்பின் தொடக்கத்தில் நன்றாகவே உணருவார்கள். வெளித்தோற்றத்தில் மகிழ்ச்சியுடனேயே காணப்படுவார்கள். அவர்கள் கொரோனா அறிகுறிகள் எதுவும் உணராமலேயே தங்களுடைய அன்றாட பணிகளை தொடர்ந்து செய்து வருவார்கள். வீட்டில் இருக்கும் இளம் வயதினர் சிலருக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைவது இந்த வியாதி நிலையில் பொதுவாக காணப்படும்.
ஹேப்பி ஹைப்போக்சியா உள்ள எந்தவொரு நபருக்கும் சுவாச கோளாறு அறிகுறிகள் வெளிப்படுவதில்லை. ஆனால், அவர்களது ரத்த ஆக்சிஜன் அளவு மிக குறைவாக ஆபத்து கட்டத்தில் இருக்கும். இதனால், நுரையீரல்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். தொடர்ந்து வியாதியின் வளர்ச்சி தீவிரமடையும்.
சிலருக்கு ஆக்சிஜன் அளவு 81ல் இருக்கும்பொழுதும் நன்றாகவே உணருவார்கள். அதிக எதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றால் இதனை அவர்கள் உணர்வதில்லை.
இதன் தொடர்ச்சியாக கொரோனா நோயாளிகளிடம் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே 40%க்கு கீழ் சென்று ஆபத்து நிலையை அடையும். அதன்பின்னரே நோயாளிக்கு எச்சரிக்கை மணி அடிக்கும்.
இதனால், உடனடியாக ஆக்சிஜன் இணைப்பு அவர்களுக்கு தேவைப்படும். சில நபர்களுக்கு வென்டிலேட்டர்களும் தேவையாக இருக்கும். நாட்டில் 2வது கொரோனா அலையில் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து உள்ள சூழலில், அறிகுறியே இல்லாமல் இதுபோன்ற துணை வியாதிகளும் ஏற்படுவது, குறிப்பிடும்படியாக இளம் வயதினரிடம் காணப்படுவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.