ரிசர்வ் வங்கியின் கவர்னரான சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது போன்று 6 மாதம் கடனுக்கான ஈஎம்ஐ சலுகை அளிக்க முடியாது, ஆனால் இதற்கு மாறாக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் இருந்தால் கடன் மறுசீரமைப்பு சலுகையைப் பெற முடியும் என அறிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்துள்ள கடன் மறுசீரமைப்பு 2.0 திட்டத்தின் மூலம் கார்பரேட், சிறு வர்த்தகங்கள் மட்டும் அல்லாமல் தனிநபர்களின் கடனுக்கும் மறுசீரமைப்பு சேவையைப் பெறலாம்.
சரி யாருக்கெல்லாம் இந்தச் சலுகை கிடைக்கும்..?
கடனுக்கான ஈஎம்ஐ செலுத்துவதற்குச் சலுகை
இந்தியாவில் ஏற்பட்ட முதல் கொரோனா அலையில் மத்திய அரசு நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது மூலம் பல கோடி மக்கள் வேலைவாய்ப்புகள், வர்த்தகத்தை இழந்த காரணத்தால் கடனுக்கான ஈஎம்ஐ செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்தப் பிரச்சனையை உணர்ந்து மத்திய அரசின் ஒப்புதலுடன் ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 31, 2020 வரையில் 6 மாதம் கடனுக்கான ஈஎம்ஐ செலுத்துவதற்குச் சலுகை அளித்தது.
இந்நிலையில் இதேபோன்ற சலுகை தற்போது நாட்டையே பயமுறுத்தி வரும் கொரோனா 2வது அலையிலும் அறிவிக்கப்படும் என அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்பார்த்து வந்த நிலையில் ரிசர்வ் வங்கி அனைவருக்குமான சலுகையை அறிவிக்காமல் பாதிக்கப்பட்டோர் மட்டும் பயன்படும் வகையில் சலுகையை அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் அறிவித்துள்ள கடன் மறுசீரமைப்பு 2.0 திட்டத்தின் கீழ் முதல் முறையாகக் கடன் சலுகை பெறத் திட்டமிடுவோருக்கும் கடனுக்கான ஈஎம்ஐ சலுகை அளிக்கப்பட உள்ளது. அதேபோல் ஏற்கனவே கடன் சலுகை பெற்றுள்ளவர்களுக்குச் சில மாற்றங்கள் உடன் கடன் சலுகை காலத்தை வங்கி நிர்வாகங்களின் முடிவுகளுக்கு ஏற்ப நீட்டிக்கப்பட உள்ளது.
2 வருடக் கடன் சலுகை
ஏற்கனவே கடன் மறுசீரமைப்பு 1.0 திட்டத்தின் கீழ் சலுகை பெற்றவர்கள் 2 வருடத்திற்குக் குறைவான அளவில் சலுகை பெற்று இருந்தால் கடன் மறுசீரமைப்பு 2.0 திட்டத்தைப் பயன்படுத்தி அதிகப்படியாக 2 வருடம் வரை அதை நீட்டிக்க முடியும். இதன் மூலம் ஒருவர் கடனுக்கான ஈஎம்ஐ செலுத்தவிதில் சலுகை அல்லது கடன் செலுத்துவதற்கான கூடுதல் காலம் பெற முடியும்.
இந்தக் கடன் மறுசீரமைப்பு 2.0 திட்டம் என்பது கிட்டதட்ட 2020ல் அளிக்கப்பட்ட கடனுக்கான ஈஎம்ஐ சலுகை போன்றதே, மேலும் இந்தச் சலுகை பெற கடனாளர்கள் வங்கிக்குச் சென்றே இதைப் பெற முடியும். மேலும் முதல் முறை சலுகை பெறுவோருக்கு 25 கோடி ரூபாய்க்கும் குறைவான கடன் உள்ளவர்களுக்கு மட்டுமே சலுகை அளிக்கப்பட உள்ளது.
மேலும் வங்கிகள் கடன் மறுசீரமைப்பு 2.0 திட்டத்தின் கீழ் செப்டம்பர் 30, 2021 வரை மட்டுமே இந்தச் சலுகையை அளிக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஒரு கடனாளிக்கு இந்தச் சலுகை அளிப்பது முழுவதும் வங்கி நிர்வாகத்தின் பொறுப்பாக உள்ளது. மேலும் கடன் அளவு அடிப்படையாகக் கொண்டு அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும்.