மருத்துவமனையில் வென்டிலேட்டரும் இல்லை.. ஆம்புலன்சும் இல்லை..உதவி கிடைக்காமல் கமாண்டோ உயிரிழந்த சோகம்
05 May,2021
டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட தேசியப் பாதுகாப்புப் படை கமாண்டோ சரியான நேரத்தில் வென்டிலேட்டர் மற்றும் ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காததால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா 2ஆம் அலை காரணமாக நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு மூன்று லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் சரியான நேரத்தில் வென்டிலேட்டர் கிடைக்காததால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தேசியப் பாதுகாப்புப் படை கமாண்டோ உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேசியப் பாதுகாப்புப் படை கமாண்டோவாக இருந்தவர் பிகே ஷா. 57 வயதான இவருக்குக் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் க்ரேட்டர் நொய்டாவிலுள்ள சிஏபிஎஃப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, உடல்நிலை மெல்ல தேறிவந்தது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அவரது திடீரென உடல்நிலை மோசமடைந்தது. வென்டிலேட்டர் இல்லை இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கும்படி
தேசியப் பாதுகாப்புப் படையினர் கேட்டுள்ளனர். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக அந்த மருத்துவமனையிலிருந்த இரண்டு வென்டிலேட்டர்களும் செயல்படவில்லை. இதைத் தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவி கோரப்பட்டது. குறைந்த நேரத்தில் வென்டிலேட்டர் ஏற்பாடு செய்ய முடியாது என எய்ம்ஸ் மருத்துவமனையும் கை விரித்து விட்டது. ஆம்புலன்சும் இல்லை இந்தச் சூழ்நிலையில், நொய்டாவில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனை, தங்களிடம் வென்டிலேட்டர் இருப்பதாகத் தெரிவித்து. இருந்தாலும்கூட அதில் மற்றொரு சிக்கல் இருந்தது. ஏனென்றால் சிஏபிஎஃப் மருத்துவமனையில் இருந்து அவரை ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தேவையான சிறப்பு
ஆம்புலன்ஸ் வசதியும் அங்கு இல்லை. சிறப்பு ஆம்புலன்ஸ் தேசிய காவல் படை மையத்திலிருந்து வரும் வரை அவர் மருத்துவமனையிலேயே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கமாண்டோ உயிரிழந்தார் ஆம்புலன்ஸ் வந்ததும், அவர் உடனடியாக ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், காலை சுமார் 3 மணியளவில் மாரடைப்பு ஏற்பட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரை காப்பாற்ற மருத்துவர்கள் முயன்றும் முடியவில்லை. வென்டிலேட்டர் மற்றும் ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் கிடைக்காததால் நாட்டுக்குச் சேவை செய்யும் தேசியப் பாதுகாப்புப் படை கமாண்டோ உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.