வெளிநாட்டு உதவிகளால் பயனடைவது யார்? மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி
05 May,2021
புதுடில்லி: வெளிநாடுகளின் உதவியால், இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கொரோனா தடுப்பு பொருட்கள் எங்கே? அவைகளால் பயனடைவது யார்? என காங்., எம்.பி., ராகுல் மத்திய அரசுக்கு சராமரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு உதவி வருகின்றன. இந்நிலையில், வெளிநாடுகள் உதவியில், இந்தியா வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்கவில்லை என ராகுல் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதுகுறித்த அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவுக்கு எந்த விதமான பொருட்கள் கிடைத்துள்ளன? அவைகள் எல்லாம் எங்கே? அவைகளை கொண்டு பயனடைபவர்கள் யார்? அவை மாநிலங்களுக்கு எப்படி வழங்கப்பட்டு வருகிறது? மருத்துவ உதவிகள் குறித்து வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்படுவது இல்லை ஏன்? இதற்கு மத்திய அரசிடம் பதில்கள் உள்ளனவா? என சராமரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.