13450 கோடி.." புது பில்டிங் கட்ட போறீங்களா, மக்களை காக்க போகிறீர்களா..மோடிக்கு ராகுல் கேள்வி
05 May,2021
சென்னை: நாடு முழுக்க கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், எதற்கு நிதி ஒதுக்குவது முக்கியம் என்று கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி.
மத்திய அரசு சென்ட்ரல் விஸ்டா என்ற ஒரு திட்டத்தை கொண்டு வருகிறதல்லவா.. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவது, பிரதமர் இல்லம் அமைப்பது, ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான பகுதிகளை மறுசீரமைக்கும் பணியை செய்வது என அனைத்துக்குமான பெயர்தான் Central Vista Project. இந்த பிரமாண்ட கட்டுமான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியது மத்திய அரசு.
இதை இன்று தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ராகுல்காந்தி. 13 ஆயிரத்து 450 கோடி ரூபாய் செலவில் சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகள் செய்யலாம் . அல்லது அந்த பணத்தை கொண்டு 45 கோடி இந்தியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட முடியும், அல்லது ஒரு கோடி ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க முடியும், அல்லது குறைந்தபட்ச வருவாய் திட்டத்தின் கீழ் 2 கோடி இந்திய குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்க முடியும் என்று குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, ஆனால் மக்களின் வாழ்க்கையை விடவும் பிரதமரின் ஈகோ மிகப் பெரியது என்று கூறியுள்ளார்.
அதாவது, பிரதமர் மோடி பிடிவாதமாக சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்காகதான் நிதியை செலவு செய்வாரே தவிர, தான் குறிப்பிட்ட மக்கள் நலப் பணிகளுக்கு செய்யமாட்டார். அதற்கு அவரது சுய முனைப்பு இடம் தராது என்பது ராகுல்காந்தி குற்றச்சாட்டாகும்.
முன்னதாக ராகுல் காந்தி வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில், லாக் டவுன் செய்வதுதான் இப்போது இருப்பதில் ஒரே வாய்ப்பாக இருக்க முடியும். வேறு எதனாலும் வைரஸ் பரவலை தடுக்க முடியாத அளவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி விட்டது. இந்தியாவுக்கு எதிராக குற்றம் இழைக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்துள்ளார்.