செங்கல்பட்டில் 11 கொரோனா நோயாளிகள் மூச்சு திணறி பலி
05 May,2021
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், கொரோனா நோயாளிகள் 11 பேர் நள்ளிரவில் அடுத்தடுத்து பலியாயினர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சு திணறல் ஏற்பட்டு பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. அதிக பாதிப்புள்ள பல்லாவரம், தாம்பரம், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, கொரோனா நோயாளிகள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 11 கொரோனா நோயாளிகள், நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ், மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன்பின் அவர் கூறுகையில், 'மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்ஸிஜன் கையிருப்பில் இருந்தது. இருப்பினும் எதிர்பாராத விதமாக உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது. 11 பேர் உயிரிழப்பு குறித்து, உரிய விசாரணை நடத்தப்படும்' என்றார்.