பிலவ வருடத்தின் அக்னி நட்சத்திரம் வருகின்ற செவ்வாய்க்கிழமை மே 4ஆம் தேதி துவங்குகிறது. அன்றைய தினத்தில் தேய்பிறை அஷ்டமியும் கூட. சூரியபகவான் தன் நோய் தீர இந்திரன் வசமிருந்த காண்டீப வனத்தை கபளீகரம் செய்த காலமே அக்னி நட்சத்திர காலம் என்று கூறப்படுகிறது.
மேலும், 21 நாட்கள் தகிக்கும் அனல் பிரபஞ்சத்தில் பாய்வதால் அக்னி நட்சத்திர காலத்தில் சில விஷயங்களை செய்யக்கூடாது என்று கூறுவார்கள்.
அதில் குறிப்பாக நெடுந்தூர பயணத்தை தவிர்ப்பது உத்தமம் என்பது மிகவும் முக்கியமானது. நெடுந்தூரம் பயணம் செய்பவர்கள் அக்னி நட்சத்திர காலத்தில் இதனை தவிர்ப்பது மிகவும் நல்லது.
சூரியனுடைய ஒளிக்கற்றைகள் அதிக அளவு பிரபஞ்சத்தில் ஊடுருவும் என்பதால் இந்த காலத்தில் கூடுமானவரை வெயிலில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. அக்னி நட்சத்திர காலத்தில் சுபகாரியங்கள் மேற்கொள்ளலாமா? என்கிற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும்.
பெண் பார்க்கும் படலம், திருமண பேச்சுவார்த்தைகள், நிச்சயதார்த்தம், சீமந்தம் போன்ற நல்ல செயல்களை தாராளமாக செய்து கொள்ளலாம் என்கிறது சாஸ்திரம். எனவே இதையெல்லாம் செய்யலாமா என்கிற அச்சமே தேவையில்லை.
இதனைத்தொடர்ந்து, அக்னி நட்சத்திர காலத்தில் காது குத்துவது, முடி இறக்குவது, புது மனை புகு விழா நடத்துவது போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. மேலும், வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் புதிதாக பால் காய்ச்சுவது கூட தவிர்க்க வேண்டும்.
புதிதாக மனை வாங்கி இருப்பவர்கள் அதற்கு பூமி பூஜை செய்வது, கிணறு வெட்டுவது, போர்வெல் அமைப்பது போன்ற வேலைகளையும் தவிர்க்க வேண்டும்.
புதிதாக செடிகளை நட்டு வளர்க்க கூடாது. செடி கொடிகளில் இருக்கும் கிளைகளை வெட்டக் கூடாது. மரத்தை வெட்டக் கூடாது. விதை விதைக்க கூடாது. வீட்டில் நார் உரிக்க கூடாது. ஏரி, குளம் போன்றவற்றை அமைக்க கூடாது.
வீடுகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கூடாது. இறை வழிபாட்டிற்கு உகந்த அக்னி நட்சத்திர காலத்தில் மேற்கூறிய விஷயங்களை தவிர்ப்பதும், செய்ய வேண்டியதை செய்வதும் நல்ல பலன்களைக் கொடுக்கும்.
முருகன் கோவில்களில் கொடுக்கப்படும் தீர்த்தங்களை வீட்டிற்கு கொண்டு வந்து வீடு முழுவதும் தெளித்தால் வீடு சுபிட்சம் அடையும் நோய் நொடிகள் அண்டாது என்கிறது ஆன்மீகம்.
மேலும் காலை, மாலையில் சூரிய காயத்ரி மந்திரம் உச்சரிப்பதும் சூரிய பகவானுக்கு உரிய கோலங்களை போட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைப்பதும் நம்மிடம் எத்தகைய பிணிகளையும் அண்டாமல் செய்யும்.