கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை அளித்து உதவ ஐ.நா. முன்வந்த நிலையில், தங்களிடம் போதிய அளவில் உபகரணங்கள் இருப்பதாகக் கூறி அந்த உதவியை இந்தியா நிராகரித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடா்பாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டடெரெஸின் துணை செய்தித் தொடா்பாளா் ஃபா்ஹான் ஹக் செய்தியாளா்களிடம் கூறுகையில் "இந்தியாவுக்கு கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களை அளித்து உதவ ஐ.நா முன்வந்தது. எனினும் தங்களிடம் போதுமான அளவு உபகரணங்கள் இருப்பதாகவும், தற்போதைய நிலையில் ஐ.நா.வின் உதவி தேவைப்படவில்லை என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
அதற்காக தனது உதவியை ஐ.நா. திரும்பப் பெறப்போவதில்லை. இந்த உதவியைப் பெறுவதற்கு எப்போதும் வேண்டுமானாலும் ஐ.நா.வை இந்தியா அணுகலாம். தன்னால் முடிந்த வழிகளில் இந்தியாவுக்கு உதவ ஐ.நா. தயாராக இருக்கிறது.
இந்தியாவில் நிலவும் கொரோனா சூழல் தொடா்பாக ஐ.நா. தலைமைச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸின் தனிச் செயலா் மரியா லூயிஸா இபெய்ரு வையட்டி ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் டி.எஸ்.திருமூா்த்தியுடன் தொடா்பில் இருந்து வருகிறார். ஐ.நா. அதிகாரிகளும் இந்திய அதிகாரிகளுடன் தொடா்பில் இருந்து வருகின்றனா்.
அனைத்து நாடுகளிலும் கொரோனா தொற்று வீழ்த்தப்பட வேண்டும். அதுவரை இந்த பிரச்னையில் எந்தவொரு நாட்டுக்கும் தனித்து தீா்வு ஏற்படாது. தற்போதைய நிலையில், அதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.
கொரோனா: நண்பருக்காக 1,400 கி.மீ. தூரத்திலிருந்து ஆக்சிஜன் வாங்கி வந்த ஆசிரியர்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது நண்பருக்காக ஓர் ஆசிரியர் காரில் 1,400 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி வந்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவைச் சேர்ந்தவர் தேவேந்திரா (38). ஆசிரியரான இவர் பொகாரோ தொழிற்பேட்டையிலுள்ள செக்டார் - 4-ம் பிரிவில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவரது நண்பர் ரஞ்சன் அகர்வால் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சினையும் இருந்தது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ரஞ்சன் அகர்வால் ஐ.டி. ஊழியர். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் வசித்து வருகிறார். நொய்டாவிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு அங்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பிரச்சினை ஏற்பட்டது. அங்குள்ள டாக்டர்கள், ஆக்சிஜன் சிலிண்டரை வெளியிலிருந்து வாங்கி வருமாறு ரஞ்சன் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இந்த விவரத்தை ரஞ்சனின் பெற்றோரிடமிருந்து கேட்ட அறிந்ததும், தேவேந்திரா தனது காரில் ஆக்சிஜன் சிலிண்டர் தேடி புறப்பட்டார்.
அங்குள்ள ஜார்க்கண்ட் ஸ்டீல் ஆக்சிஜன் தொழிற்சாலையில் தனது நண்பரின் உதவியால் சிலிண்டர் கிடைத்தது. பின்னர் அங்கிருந்து ஆக்சிஜன் சிலிண்டரை ஏற்றிக் கொண்டு நொய்டாவுக்கு காரில் புறப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புறப்பட்ட அவர் தொடர்ச்சியாக காரை ஓட்டிக் கொண்டு நொய்டாவுக்கு வந்து சேர்ந்து, டாக்டர்களிடம் ஆக்சிஜன் சிலிண்டரை ஒப்படைத்தார். தற்போது ரஞ்சன் அகர்வால் உடல்நலம் தேறி வருவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
9 நாட்கள் சிகிச்சை: கொரோனாவை வீழ்த்திய 105 வயது கணவர், 93 வயது மனைவி
கொரோனா பாதிப்பில் இருந்து 105 வயது கணவனும், 93 வயது மனைவியும் மீண்டு வந்த சம்பவம் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்களும் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வருகின்றனர்.
105 வயது நிரம்பிய கணவரும் அவரது 93 வயது மனைவியும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிகழ்வு அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
மராட்டிய மாநிலம் லட்டூர் மாவட்டம் கட்ஹான் தண்டா கிராமத்தை சேர்ந்த 105 முதியவர் தெஹ்னு சவான் மற்றும் அவரது 93 வயது மனைவி மோடாபாய் ஆகிய இருவருக்கும் சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த தம்பதிக்கு லட்டூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.அவர்களுக்கு கொரோனா பாதிப்பு சற்று அதிகமாக இருந்ததால் ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இப்படி 9 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த தம்பதியர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளையில் நீதிபதியாக இருந்த வீரேந்திர குமார் ஸ்ரீவஸ்தவா கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
59 வயதான வீரேந்திர குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது சமீபத்தில் தெரிய வந்தது. எனவே லக்னெளவில் இருக்கும் சஞ்ஜீவ் காந்தி போஸ்ட் க்ராஜுவேட் இன்ஸ்டிட்யூட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று (ஏப்ரல் 28, புதன்கிழமை) அவர் மருத்துவமனையிலேயே இறந்ததாக அலகாபாத் உயர் நீதிமன்றப் பதிவாளர் ஆஷிஷ் குமார் கூறினார்.
நீதிபதி இறந்ததை ஒட்டி இன்று அலஹாபாத் உயர் நீதிமன்றம் செயல்படாது என செய்திகள் வெளியாகியுள்ளன.
மறைந்த நீதிபதிக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்திருப்பதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.