கேரளாவில் ஒரே நாளில் 35 ஆயிரம் பேர் பாதிப்பு
29 Apr,2021
கேரளாவில், கொரோனாவின் 2-வது அலை உச்சம் தொட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் வரலாறு காணாத வகையில் 35 ஆயிரத்து 13 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அதே நேரத்தில் அங்கு 15 ஆயிரத்து 505 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
இதுகுறித்து முதல்மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:-
“கடந்த 24 மணி நேரத்தில் இங்கிலாந்தில் இருந்து கேரளா திரும்பிய 116 பேரில், ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. அவர்களது சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதுவரை இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 11 பேருக்கு புதியவகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.” என்றார்.
நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 190 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டத்தில், 25.34 சதவீதம் (35,013) பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 41 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
கேரளாவில் 11 இடங்கள் கொரோனா அதிகம் பரவும் புதிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றையும் சேர்த்து மொத்தம் 597 இடங்கள் கொரோனா அதிகம் பரவும் மையங்களாக பதிவாகி உள்ளன.