கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 22 பேரின் உடல்களை ஒரே ஆம்புலன்ஸில் ஏதோ சாக்குமூட்டைகளை ஏற்றுவது போல் ஏற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் மாவட்டம் பீட் நகரில் உள்ள மருத்துவமனையில்தான் இந்த உணர்வற்ற மனிதார்த்த சிந்தனையற்ற அவலச்செயல் நடந்துள்ளது.
கொரோனா நோயாளிகளை இஷ்டத்துக்கு எரிப்பது, புதைப்பது என்று கண்ணியமற்ற முறையில் மாநகராட்சிகள், மருத்துவமனைகள் நடந்து கொள்வதாக உச்ச நீதிமன்றமே எச்சரித்திருந்தது. ஆனால் அதையும் மீறி மனிதாபாபிமானமற்ற, உடல்களை ஏதோ சரக்குகள் போல் கையாளும் உணர்வற்ற கொஞ்சம் கூட இதயமற்ற செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது, அன்று ஒரு உடலை சிந்திக்கொண்டே செல்லும் அவலத்தை நாடு கண்டது.
பீட் நகரில் உள்ள அம்பாஜோகோய் எனும் இடத்தில் உள்ள சுவாமி ராமானந்த் தீர்த்த கிராமப்புற அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் கரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன.
மருத்துவக் கல்லூரிக்குப் போதுமான ஆம்புலன்ஸ் வழங்கப்படவில்லை என்பதால், ஒரே நேரத்தில் 22 உடல்களையும் அடுக்கிவைத்து மருத்துவமனை ஊழியர்கள் தகணம் செய்யும் இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் மருத்துவர் சிவாஜி சுக்ரே, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “கொரோனா முதல் அலை வந்த போது 5 ஆம்புலன்ஸ்கள் கொடுக்கப்பட்டன, இப்போது 2 ஆம்புலன்ஸ்கள்தான் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒரு ஆம்புலன்ஸில் இறந்தவர்களின் உடல்களையும், மற்றொரு ஆம்புலன்ஸில் நோயாளிகளையும் அழைத்துவருகிறோம். இங்கிருந்து உடல்களை அருகே இருக்கும் லோகந்தி ஸ்வர்கான் எனும் கிராமத்தில் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எரியூட்டும் மையத்துக்குக் கொண்டு சென்றோம். உடல்களைப் பாதுகாக்கும் வசதியும் இல்லை. கூடுதலாக 3 ஆம்புலன்ஸ்களை வழங்கக் கோரி கடந்த 17-ம் தேதி மாவட்ட நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதினேன். இதுவரை பதில் இல்லை” எனத் தெரிவித்தார். இப்படியாக ஒவ்வொருவரும் தான் அல்லாத பிறரைச் சுட்டிக்காட்டி பொறுப்பை தட்டிக் கழித்து வருகின்றனர்.
பாஜக எம்எல்சி சுரேஷ் தாஸ் கூறுகையில், “ஒரே ஆம்புலன்ஸில் 22 உடல்களைக் கொண்டுசென்றது குறித்துக் கேள்வி கேட்டால், மருத்துவமனை நிர்வாகமும், உள்ளாட்சி நிர்வாகமும் மாறி மாறித் தங்களுக்குள் குற்றம் சாட்டுகின்றன” எனத் தெரிவித்தார்.
பீட் நகராட்சித் தலைவர் ராஜ்கிஷோர் கூறுகையில், “இந்தச் சம்பவத்தைக் கேட்டு வேதனைப்படுகிறேன். அன்றைய தினம் மற்றொரு ஆம்புலன்ஸில் 8 உடல்கள் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரிக்குக் கூடுதலாக ஆம்புலன்ஸ் வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பேசுவோம்” என நேர்மறையான தொனியில் பேசியது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.