ஒரு கொரோனா நோயாளி 30 நாட்களில் 406 பேருக்கு தொற்றைப் பரப்புவார்;
27 Apr,2021
சமூக இடைவெளியை தயவுகூர்ந்து கடைபிடியுங்கள்: மத்திய அரசு கோரிக்கை
.
கொரோனா பாதித்த நோயாளி ஒருவர் சமூக இடைவெளியை பராமரிக்கவில்லை எனில் அவரிடமிருந்து 30 நாட்களில் 406 பேருக்குக் கொரோனா தொற்றும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
எனவே சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் இன்றியமையாத ஒரு கொரோனா தடுப்பு உத்தியாகும் என்கிறது மத்திய அரசு. அமெரிக்காவில் 2-3 மாஸ்க்குகள் அணியுமாறு பொதுமக்களை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் இப்போது பரவும் கொரோனா ஸ்ட்ரெய்ன் மிகவும் வீரியமிக்கது என்பதே.
சுகாதார அமைச்சகத்தின் இணைச்செயலர் லாவ் அகர்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் இதை வலியுறுத்தினார்.
பல பல்கலைக் கழகங்களின் ஆய்வுகளை சுட்டிக்காட்டி இணைச்செயலர் லாவ் அகர்வால் கூறும்போது, ஒரு கொரோனா நோயாளி சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளைக் கண்டுகொள்ளாமல் நடந்தால் அவர் மூலம் 406 பேருக்குப் பரவும் அபாயம் உள்ளது. இதே ஒரு கொரோனா நோயாளி 50% வெளியே செல்வதைக் குறைக்கும் போது 30 நாட்களில் 15 பேருக்கு தொற்றைப் பரப்புவார் என்றார்.
“கொரோனா நோயாளிகள் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு வீட்டிலேயே இருக்கிறார், 50% தான் வெளியே வருகிறார் என்றால் அவர் மூலம் 30 நாட்களி 15 பேருக்கு மட்டும்தான் பரவும், ஆனால் அவர் தன் இஷ்டத்துக்கு வழக்கமாக வெளியே சென்று கொண்டு சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்தாரேயானால் 30 நாட்களில் 406 பேருக்குத் தொற்றை பரப்புவார் இதே தொற்று உள்ள நபர் 75% தனது தொடர்பை குறைத்துக் கொண்டால் 30 நாட்களில் 2 பேர்களுக்குத்தான் பரப்புவார்” என்கிறார் லால் அகர்வால்.
ஒருபுறம் கிளினிக்கல் நிர்வாகமும் தேவை மறுபுறம் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் தேவை என்கிறார்.
“நாம் 6 அடி சமூக இடைவெளி கடைப்பிடித்தாலே தொற்று உள்ளவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது என்கிறது ஆய்வுகள். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாலும் கூட வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு தொற்றும் வாய்ப்பு உள்ளது. முகக்கவசம் முறையகப் பயன்படுத்தப்படவில்லை எனில் தொற்று உள்ளவர்கள் நிச்சயம் தொற்று இல்லாதவர்களுக்கும் தொற்றை பரப்புவார்கள்.
மேலும் கொரோனா நோய் உள்ளவர்கள் மாஸ்க் அணியவில்லை ஆனால் தொற்று இல்லாதவர் மாஸ்க் அணிந்திருக்கிறார் என்றால் தொற்று இல்லாதவருக்கு 30% தொற்று பரவும் அபாயம் உள்ளது. ஆனால் அனைவரும் மாஸ்க் அணிந்தால் பரவும் வாய்ப்பு மிகமிகக்குறைவு.
இருவருக்கு இடையே 6 அடி இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்றவற்றைக் கடைப்பிடித்தால் பரவும் வாய்ப்பு மிகக் குறைவு., என்கிறார் அகர்வால்.