உள்நாட்டு விமான பயணத்திற்கும் மருத்துவ சான்றிதழ் கட்டாயம்
27 Apr,2021
சென்னை: உள்நாட்டு விமான பயணியரும், 'கொரோனா தொற்று இல்லை' என்ற, மருத்துவ பரிசோதனை சான்றுடன் வருவது, நேற்று முதல் கட்டாயமாகி உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து, வெளிநாடுகளுக்கு செல்லும் விமான பயணியர், கொரோனா தொற்று இல்லை என்ற, மருத்துவ பரிசோதனை சான்றுடன் பயணிப்பது கட்டாயம். தற்போது, சென்னையில் இருந்து, அந்தமான், ஒடிசா, ராஜஸ்தான், மணிப்பூர், மேற்குவங்கம், குஜராத் மாநிலங்களுக்கு செல்லும் உள்நாட்டு பயணியருக்கும், மருத்துவ சான்றிதழ் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
இந்த மாநிலங்களுக்கு பயணம் செய்யவுள்ளவர்கள், 72 மணி நேரத்திற்கு முன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான, ஐ.சி.எம்.ஆர்., அங்கீகாரம் பெற்ற, ஆய்வகத்தில் பரிசோதனை செய்து, 'கொரோனா தொற்று இல்லை' என்ற சான்று பெற வேண்டும். அதன்பிறகே, விமானம் பயணம் மேற்கொள்ள முடியும்.
கொரோனா பரிசோதனை சான்றிதழை, விமான நிறுவன கவுன்டர்களில் சமர்ப்பிப்போருக்கு மட்டுமே, விமானத்தில் பயணம் செய்வதற்கான, 'போர்டிங் பாஸ்' வழங்க, விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 'தனி விமானங்களில், இந்த ஆறு மாநிலங்களுக்கு பயணம் செய்வோருக்கும், இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும்' என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.