இந்தியாவுக்கு அடுத்த, 15 நாட்களுக்கு சரக்கு விமான சேவை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாக, சீனாவின், 'சிச்சுவான் ஏர்லைன்ஸ்' தெரிவித்துள்ளது.
சீன அரசின், சிச்சுவான் ஏர்லைன்சின் துணை நிறுவனமான, சிச்சுவான் சுவான்ஹங் லாஜிஸ்டிக்ஸ், அதன் முகவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், அடுத்த, 15 நாட்களுக்கு, இந்தியாவுக்கு ஆறு வழித்தடங்களில் மேற்கொள்ளும் சரக்கு விமான சேவை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை, இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பீஜிங்கில் உள்ள, 'சினோ குளோபல் லாஜிஸ்டிக்ஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த, சித்தார்த் சின்ஹா கூறியதாவது:இந்தியாவுக்கு சரக்கு விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது, இந்திய - சீன வர்த்தகர்களை பாதித்துள்ளது.
இனி, சிங்கப்பூர் உள்ளிட்ட பிற நாடுகள் வாயிலாகத் தான், இந்தியாவுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை ஏற்றுமதி செய்ய முடியும். இதனால், ஏற்றுமதி செலவு அதிகரிக்கும். சீனாவில் இருந்து, இதர சரக்கு விமானங்கள் வாயிலாக, மொபைல் போன் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பிற பொருட்கள், இந்தியாவுக்கு தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆனால், மருத்துவ பொருட்களை ஏற்றுமதி செய்யும் விமான சேவை மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது. இதற்கிடையே, கொரோனா பிரச்னையை பயன்படுத்தி, சீன நிறுவனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றின் விலையை உயர்த்தி விட்டன.இவ்வாறு அவர் கூறினார்.