இந்தியாவுக்குத் தோள்கொடுக்கும் ஆஸி.,; ஸ்காட் மோரிசன் உறுதி
25 Apr,2021
உலகில் கொரோனா வைரஸ் தாக்கத்தை சிறப்பாகக் கட்டுப்படுத்தும் நாடுகளில் முக்கிய இடம் பெற்று இருப்பது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தற்போது இந்தியாவுக்கு உதவுவதாக கூறியுள்ளது வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அமெரிக்காவையே மிஞ்சிவிடும் அளவிற்கு பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று வருவது பலர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பு மருந்து செலுத்தும் பணி தீவிரமடைந்து வரும் நிலையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டால் வயோதிகர்கள் பலர் அவதியுற்று வருகின்றனர்.
மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுபாடு உச்சத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து இந்தியாவின் நட்பு நாடான ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு உதவுவதாக கூறி ஆதரவுக்கரம் நீட்டி உள்ளது சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்துப் பேசிய அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து இந்தியாவின் கொரோனா மீட்பு நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய அரசு உதவும் என்று உறுதி அளித்துள்ளார். இன்று கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்களது எண்ணிக்கை 3 லட்சத்து 46 ஆயிரத்து தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,624 பேர் வைரஸ் தாக்கத்திற்கு பலியாகி உள்ளனர். முதல் அலையைக் காட்டிலும் இரண்டாவது அலை இன்னும் மூர்க்கமாக இருக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். உலக நாடுகளின் உதவியுடன் இந்தியா இதிலிருந்து மீண்டு வரும் என்று மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.