ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறும் இந்தியா!
25 Apr,2021
போற போக்க பாத்தா ஆக்சிஜன கூட காசு கொடுத்து தான் வாங்கணும் போல என கூறுவதை கேட்டிருக்கிறோம். ஆனால் காசு கொடுத்தால் கூட ஆக்சிஜன் கிடைக்காது என்பது தான் இந்தியாவின் தற்போதைய நிலைமை. ஆக்சிஜன்... கடந்த சில நாட்களாகவே நாம் செய்தியில் அதிகமாக கேட்கும் வார்த்தை. ஆக்சிஜன் இன்றி தவிக்கும் நோயாளிகளும் , அவர்களுக்கு ஆக்சிஜன் ஏற்பாடு செய்து தந்துவிட முடியுமா என்ற ஏக்கத்துடன் நண்பர்களும் உறவினர்களும் போடும் பதிவுகள் சமூகவலைதளங்களில் நிரம்பி இருக்கின்றன.
போற போக்க பாத்தா ஆக்சிஜன கூட காசு கொடுத்து தான் வாங்கணும் போல என கூறுவதை கேட்டிருக்கிறோம். ஆனால் காசு கொடுத்தால் கூட ஆக்சிஜன் கிடைக்காது என்பது தான் இந்தியாவின் தற்போதைய நிலைமை. ஆக்சிஜன்... கடந்த சில நாட்களாகவே நாம் செய்தியில் அதிகமாக கேட்கும் வார்த்தை. ஆக்சிஜன் இன்றி தவிக்கும் நோயாளிகளும் , அவர்களுக்கு ஆக்சிஜன் ஏற்பாடு செய்து தந்துவிட முடியுமா என்ற ஏக்கத்துடன் நண்பர்களும் உறவினர்களும் போடும் பதிவுகள் சமூகவலைதளங்களில் நிரம்பி இருக்கின்றன.
ஆக்சிஜன் சிலிண்டர்களை கையில் வைத்து கொண்டு நோயாளிகள் அமர்ந்திருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் ஒவ்வொரு நிமிடமும் நம் கண்களில் தென்பட்ட வண்ணம் இருக்கின்றன. பல இடங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் திருடப்பட்ட சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன.
ஆக்சிஜன் இல்லாததால் நோயாளிகள் உயிரிழப்பு என்பது நாம் தினமும் கேட்கும் செய்தியாக மாறி இருப்பது தான் கொடுமையின் உச்சம். டெல்லியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் கடந்த 2 நாட்களில் மட்டும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 40க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். இன்னும் சில மணி நேரங்களில் ஆக்சிஜன் கிடைக்கவில்லை எனில் 200 நோயாளிகளின் கதி என்ன ஆகும் என யூகிக்க முடியாது என தங்களது கையறுநிலையை டெல்லியை சேர்ந்த மருத்துவமனைகள் வெளிப்படையாக அறிவிக்கும் நிலை உருவாகிவிட்டது.
இந்தியாவில் ஒரு நாளைக்கு 7 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 54 சதவிகிதம் மருத்துவமனைகளுக்கும், மற்றவை தொழிற்சாலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்ததை தொடர்ந்து தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்தது.
எனவே உற்பத்தியாகும் ஆக்சிஜன்கள் பெரும்பாலும் மருத்துவத் தேவைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ரயில்கள், விமானங்கள் என அனைத்துவகை போக்குவரத்தும் ஆக்சிஜனை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டாலும் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தட்டுப்பாடு நீடிப்பது ஏன் என்ற கேள்வி எழலாம்.
தமிழ்நாடு, கேரளா ,கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் தான் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட தேவை அதிகமாக இருக்கும் மாநிலங்களுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்ல தேவையான கட்டமைப்பு இல்லை என்பது தான் தற்போதைய நிலைக்கு காரணம். ஆக்சிஜனை கொண்டு செல்ல க்ரையோஜீனிக் டேங்கர் லாரிகளே தேவை. ஆனால் நம்மிடம் போதுமான அளவு அந்த டேங்கர் லாரி இல்லை. ஆக்சிஜனை கொண்டு சென்றாலும் அவற்றை சேமிப்பதற்கான சிலிண்டர்கள் போதிய அளவில் இல்லை என்கின்றனர் களநிலவரம் அறிந்தவர்கள்.
இதனை அரசு எப்படி சமாளிக்க போகிறது எனத் தெரியவில்லை. ஏனெனில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்கிறது. படுக்கைகளும் நிரம்புகின்றன. அத்துடன் ஆக்சிஜன் தேவையும் அதிகரிக்கிறது. பொதுமக்களும் இதனை தீவிரமாக எடுத்து கொண்டு முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் போன்ற வழிமுறைகளை புறந்தள்ளாமல் செயலாற்ற வேண்டும்.