தமிழக அரசின் பயிர்க்கடன் ரத்து அறிவிப்பால் கடந்த 2 மாதங்களாக கூட்டுறவு சங்கங்கள் கடும் நெருக்கடியில் உள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். என்ன நடக்கிறது?
எடப்பாடி பழனிசாமியின் பெருமிதம்
சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றது. அப்போது 110 விதியின்கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட முதல்வர் பழனிசாமி, ` தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, 31.1.2021 அன்றைய நிலவரப்படி, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாயும் தள்ளுபடி செய்யப்படும்' என்றார். மேலும், ' விவசாயிகளுக்கு துயர் ஏற்படும்போதெல்லாம் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிக் காப்பதில் இந்த அரசு முன்னணியில் இருந்து வருகிறது' எனவும் பெருமிதப்பட்டார்.
`` விவசாயிகளின் வாக்குகளை மனதில் வைத்து இப்படியொரு அறிவிப்பை அரசு வெளியிட்டது. இதனால் மொத்த கூட்டுறவு சங்கங்களும் சம்பளம் உள்பட இதர செலவுகளை ஈடுகட்ட முடியாமல் தவிக்கின்றன. இதுகுறித்தெல்லாம் அதிகாரிகளும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை" என்கிறார் தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) மாநிலத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி.
"அப்போதே எச்சரித்தோம்"
`` தமிழ்நாட்டில் 4,530 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் 180 தொடக்கநிலை ஊரக வளர்ச்சி வங்கிகளும் செயல்படுகின்றன. இவற்றில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளின் தொகையை அரசு தள்ளுபடி செய்தது. இந்தத் தொகையில் பயிர்க்கடனுக்காக நகை, பத்திரம் போன்றவற்றை அடமானம் வைத்தவர்களும் அடங்குவர். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, `12,110 கோடி ரூபாயையும் நடப்பு நிதிநிலை அறிக்கையில் அரசு விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் மீளாத் துயரில் கூட்டுறவு சங்கங்கள் ஆழ்ந்துவிடும் எனவும் எச்சரித்தோம். இதனையடுத்து 5,000 கோடி ரூபாயை விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்தப் பணமும் கூட்டுறவு சங்கங்களுக்கு சரியாகச் சென்று சேரவில்லை" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` அரசு விடுவித்த 5,000 கோடி ரூபாயும் மாநில கூட்டுறவு வங்கிக்குச் சென்றுவிட்டது. அந்தப் பணம் அங்கேயே வரவு வைக்கப்பட்டுவிட்டது. இந்தப் பணத்தை எப்போது சங்கங்களுக்கு விடுவிப்பார்கள் எனத் தெரியவில்லை. கடன் தள்ளுபடிக்குப் பிறகு கூட்டுறவு சங்கங்கள் அன்றாடம் செயல்படக் கூடிய தன்மைக்குக் கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதிலும் அரசு அக்கறை காட்டவில்லை. இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் ஒன்றும் உள்ளது.
அமைதி காக்கும் அதிகாரிகள்
பயிர்க்கடனுக்காக விவசாயிகள் பலர் நகையை அடமானம் வைத்துள்ளனர். அவர்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு அடையாளமாக, `தவணை இல்லை' என்பதற்கான சான்று கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், நகையை இன்னும் விடுவிக்காமல் உள்ளனர். அந்த நகைகள் ஒருவேளை திருட்டுப் போனால் அதற்கு காப்பீடும் பெற முடியாது. ஏனென்றால், கடன் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதால் அந்த நகை இருப்பதாகக் கணக்கிலும் காட்ட வாய்ப்பில்லை. இந்த நகைகளுக்கு அரசு பொறுப்பேற்குமா? பயிர்க்கடனைத் தொடர்ந்து 5 சவரனுக்கு நகைக்கடனும் ரத்து என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால், அதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் நகைக்கடன் தள்ளுபடிக்கு அரசாணையை வெளியிட முடியவில்லை. இப்போது பயிர்க்கடனுக்கான நகையை விடுவித்தால் நகைக்கடன் பெற்றவர்களும் கேட்பார்கள் என்பதால் அதிகாரிகள் அமைதியாக உள்ளனர்" என்கிறார்.
கருணைத் தொகைக்கு வழி?
மேலும், `` கூட்டுறவு சங்கங்களில் நிதி இல்லாததால் கடந்த 2 மாதங்களாக விவசாயிகளுக்குக் கொடுப்பதற்கு எந்தப் பணமும் இல்லை. சுழற்சி முறையில் வரவு செலவு நடந்தால்தான் சங்கம் சிறப்பாகச் செயல்படும். தேர்தலுக்காக விவசாயிகள் விவசாயம் செய்யாமல் இருக்க முடியுமா? இதைவிடக் கொடுமை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் கருணை ஓய்வூதியத் தொகை வழங்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார். இதற்காக அரசு சார்பில் விழா நடத்தி ஓய்வூதிய அட்டையைக் கொடுத்தார்கள்.
ஆனால், இந்தப் பணத்தை அந்தந்த சங்கங்களே திரட்டிக் கொள்ள வேண்டும் எனக் கூறிவிட்டனர். சங்கத்தில் இருந்து சம்பளம் கொடுப்பதற்கே வழியில்லாமல் தவிக்கிறோம். இதில், கருணை ஓய்வூதியத் தொகையை எப்படி வழங்குவது? அரசு அறிவித்த 12,110 கோடியும் முழுமையாக வராத வரையில் சங்கங்களை தொடர்ந்து நடத்துவதே பெரிய விஷயம்தான்" என்கிறார் ஆதங்கத்துடன்.
ரேசன் கடை ஊழியர்களின் வேதனை
இதுதவிர, கூட்டுறவுத் துறையின்கீழ் செயல்படும் ரேசன் கடை ஊழியர்களின் நிலையும் வேதனை அளிப்பதாக கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள 33,000 ரேசன் கடைகளில் 9,000 கடைகள் பகுதிநேரமாக செயல்படுகின்றன. இதில், 1,127 கடைகள் நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படுகின்றன. இவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று தடுப்புக்கான பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுப்பதில் அரசு அக்கறை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
`` கடந்த மார்ச் மாதம் கடைகளில் வாங்கிய உபகரணங்களுக்கே அரசு இன்னும் பணம் ஒதுக்கவில்லை. காவல்துறை உள்பட மக்களோடு தொடர்பில் உள்ள மற்ற துறைகளில் எல்லாம் மிகச் சரியாக பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ரேசன் கடை ஊழியர்களின் நலனில் யாரும் அக்கறை செலுத்துவதில்லை. கொரோனா முதல் அலையில் 12 ஊழியர்கள் வரையில் இறந்துவிட்டனர்.
இரண்டாவது அலையின் காரணமாக, கடந்த 2 நாள்களுக்கு முன்னால் சைதாப்பேட்டையில் பணியாற்றி வந்த டி.யூ.சி.எஸ் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றால் இறந்துவிட்டார். இன்னும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அரசு அக்கறை காட்டுகிறது. இந்தப் பட்டியலில் ரேசன் கடை பணியாளர்கள் இடம்பெறவில்லை. இதில் எத்தனை பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு முறையான கணக்கு வழக்குகளும் இல்லை" என்கிறார் ரேசன் கடையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர்.
``எது சொன்னாலும் நடக்காது``
கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் குமுறல் தொடர்பாக விளக்கம் பெற கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்ரமணியத்தை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம். அப்போது பேசிய தனி உதவியாளர் ஒருவர், `` முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறார். இதுதொடர்பாக, நிதி மற்றும் வங்கிப் பிரிவுக்கான கூடுதல் பதிவாளர் அந்தோணிசாமி ஜான் பீட்டரிடம் பேசுங்கள். அவர் உங்களுக்கு விளக்கம் அளிப்பார்' என்றார். இதையடுத்து, அவரை தொடர்பு கொண்டபோது, ``மீட்டிங்கில் இருக்கிறார். இப்போது பேசுவது சிரமம்' என அவரது உதவியாளர் தெரிவித்தார்.
இதையடுத்து, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினாம். `` பயிர்க்கடனுக்கு பத்திரம் அல்லது நகையை வைத்து கடன் பெறுவது வழக்கம். இது பயிர்க்கடனில் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும். நகைக் கடன் ரத்து எனத் தனியாக அறிவித்ததற்கு அரசாணை வெளியிடப்படவில்லை. அப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. பயிர்க் கடன் பெறுவதற்காக நகையை அடமானம் வைத்துள்ளவர்களுக்கு எந்தச் சிரமமும் இல்லை. பின்னர் அறிவிக்கப்பட்ட நகைக்கடனும் விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும். இந்த விவகாரத்தில், நிதித்துறை செயலாளர் நிதியை ஒதுக்க வேண்டும்" என்கிறார்.
`சம்பளம் கொடுப்பதற்கே சிரமபப்படுவதாகச் சொல்கிறார்களே?' என்றோம். `` அப்படியெல்லாம் சிரமம் இருப்பதற்கு வாய்ப்பில்லை. பயிர்க்கடனை உரிய காலத்தில் தள்ளுபடி செய்துவிட்டோம். அதற்கான நிதி இயல்பாகவே சென்றுவிடும். அதேபோல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்குக் கருணைத் தொகை வழங்குவதிலும் எந்தச் சிக்கலும் இல்லை. அந்தப் பணமும் சரியாகச் சென்று சேர்ந்துவிடும். அரசாங்கம் இப்போது இயங்கிக் கொண்டிருந்தால் ஓர் அரசாணை போட்டுவிட்டால் போதும். உடனே எல்லாம் சரியாகிவிடும். இப்போது காபந்து அரசாக இருப்பதால் நாங்கள் எது சொன்னாலும் நடப்பதற்கு வாய்ப்பில்லை" என்றார்.