ஜெர்மனியில் இருந்து 23 ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் இந்தியா வருகிறது!
24 Apr,2021
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் இருந்து, 23 நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்களை விமானம் வாயிலாக எடுத்து வர, ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
நாடு முழுதும், பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை சமாளிக்க தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை வாங்க, முப்படைகளுக்கு அவசரகால நிதி அதிகாரத்தை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் வழங்கினார். இதையடுத்து, ஜெர்மனியில் இருந்து, 23 நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்களை விமானம் வாயிலாக எடுத்து வர, ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து ராணுவ அமைச்சக முதன்மை செய்தி தொடர்பாளர் பரத் பூஷண், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெர்மனியில் இருந்து விமானம் வாயிலாக, 23 நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் எடுத்து வரப்பட உள்ளன. இவை இன்னும் ஒரு வார காலத்திற்குள் வந்து சேரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஒவ்வொரு இயந்திரமும், ஒரு மணி நேரத்தில், 2,400 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் உடையது.
இவை, கொரோனா சிகிச்சை அளிக்கப்படும், ஆயுதப்படை மருத்துவ சேவைகள் மைய மருத்துவமனைகளில் நிறுவப்படும்.இந்த இயந்திரங்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சுலபமாக எடுத்துச் செல்ல முடியும். வெளிநாடுகளில் இருந்து, மேலும் பல ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்களை வாங்கும் திட்டம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்