இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் திரிபைக் குறித்து உலகம் முழுக்க பரவியுள்ள அறிவியலாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஆனால் அந்தத் திரிபு எவ்வளவு பரவி இருக்கிறது என்கிற விவரமோ, அத்திரிபுதான் இந்தியாவில் இரண்டாம் அலையை முன்னெடுத்து வருகிறதா என்கிற விவரங்களோ தெரியவில்லை.
இந்திய திரிபு என்றால் என்ன?
கொரோனா வைரஸ் காலப் போக்கில் தன்னைத் தானே மரபணு ரீதியாக மாற்றி அமைத்துக் கொள்கிறது. அதை ஆங்கிலத்தில் மியூட்டேஷன் என்கிறோம். இப்படி மாற்றமடையும் வைரஸ்களை, திரிபுகள் (வேரியன்ட்) என்கிறோம்.
வைரஸில் காணப்படும் பல மாற்றங்கள் பெரும்பாலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது. சில மாற்றங்கள் வைரஸை பலவீனப்படுத்தும், சில மாற்றங்கள் வைரஸை அதிக ஆபத்தானதாக்கும். அதிவேகமாக பரவக் கூடியதாகவும், தடுப்பூசிகளுக்கு எதிராக செயல்படக் கூடியதாக்கும்.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் கொரோனா வைரஸின் திரிபை B1617 என்கிறார்கள். இந்த திரிபு கடந்த அக்டோபர் 2020-ல் கண்டுபிடிக்கப்பட்டது.
B1617 கொரோனா திரிபு இந்தியாவில் எவ்வளவு தூரம் பரவி இருக்கிறது, எத்தனை விரைவாக பரவி இருக்கிறது என பெரிய அளவில் மாதிரிகள் பரிசோதிக்கப்படவில்லை.
கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதத்துக்குள், மாகாராஷ்டிர மாநிலத்தில் பரிசோதித்த 361 மாதிரிகளில் 220 மாதிரிகள் இந்த B1617 திரிபு என கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
அதே காலகட்டத்தில் இந்த B1617 கொரோனா திரிபு 21 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக 'குளோபல் இன்ஃப்லுயன்ஸா சர்வைலன்ஸ் அண்ட் ரெஸ்பான்ஸ் சிஸ்டம்' (GISAID) என்ற அமைப்பின் தரவுகள் கூறுகின்றன.
கடந்த பிப்ரவரி 22-ம் தேதி முதல், பிரிட்டன் நாட்டில் 103 பேர் இந்த B1617 திரிபால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச அளவில் திறந்துவிடப்பட்ட பயணங்களால் இந்த திரிபு பரவி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தற்போது பெரும்பாலான இந்தியர்கள், பிரிட்டன் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்தின் பொது சுகாதார அமைப்பு, இந்தியாவின் கொரோனா திரிபை 'ஆய்வில் இருக்கும் திரிபுகளில் ஒன்று' என வகைப்படுத்தி இருக்கிறது. இந்திய திரிபை 'ஆபத்தான திரிபு' என இதுவரை வகைப்படுத்தவில்லை.