தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து உள்ளதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 20-ந்தேதி முதல் தினமும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று 3-வது நாளாக இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
தினமும் இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கின்போது அவசர தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டும் என்றும், தேவை இல்லாமல் யாராவது வெளியில் சுற்றினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை இரவு (சனிக்கிழமை) 10 மணியில் இருந்து 4-வது நாளாக இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் அதற்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்படுகிறது.
இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடிய தெரு
இரவு நேர ஊரடங்கின் போது இரவு 10 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியில் வருவதற்கு தடை உள்ளது. இதனுடன் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழுவதுமாக 24 மணி ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் பொதுமக்கள் நாளை இரவு 10 மணியில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் 30 மணி நேரம் தொடர்ச்சியாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், பால் வண்டிகள் ஆகியவை அனுமதிக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இதனை மீறி யாராவது வெளியில் வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தடையை மீறி இரவு நேர ஊரடங்கின்போது வெளியில் வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போலீசார் இந்த நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நாளை மறுநாள் முழு ஊரடங்கின்போதும், ஊரடங்கு நடைமுறைகளை முழுமையாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் நாளை இரவு 10 மணியில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை தொடர்ச்சியாக ரோந்து பணிகளில் ஈடுபட போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக ஷிப்டு முறையில் போலீசாருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் முழு ஊரடங்கின்போது 200 இடங்களில் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 500 ரோந்து வாகனங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரை பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.