கொரோனா 2வது அலை: எந்த வயதினருக்கு அதிகம்?
20 Apr,2021
கொரோனா பரவலின் இரண்டாம் அலையிலும், பாதிப்பிற்கு உள்ளானவர்களில், 70 சதவீதம் பேர், 40 வயதிற்கு மேற்பட்டவர் கள்' என, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறி உள்ளது.
ஐ.சி.எம்.ஆர்., இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்கவா நேற்று கூறியதாவது:எங்கள் ஆய்வுகளின் அடிப்படையில், கடந்த ஆண்டும், தற்போதைய இரண்டாம் அலையிலும், வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்களில், 70 சதவீதம் பேர், 40 வயதை கடந்தவர்கள்.
இதன்படி, வயதில் மூத்தோர் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.தற்போது, இளம் வயதினர் பாதிக்கப்படுவது சற்று அதிகரித்து உள்ளது. அறிகுறியற்ற பாதிப்புகளும் அதிகம் பதிவாகிறது.மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உயிரிழப்போரில், கடந்த முறைக்கும், தற்போதைய நிலைக்கும், வேறுபாடு ஏதும் இல்லை.தற்போது பாதிக்கப்படுவோருக்கு வறட்டு இருமல், தொண்டை புண் போன்ற அறிகுறிகள் இல்லை. ஆனால், பலருக்கும் மூச்சுத்திணறல் அதிகமாக உள்ளது. இதனால், 'ஆக்சிஜன் சிலிண்டர்' உதவியுடன் சிகிச்சை பெறுவோர் விகிதம், 54.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த முறை இது, 41.5 சதவீதமாக இருந்தது. இரண்டாவது அலையில், 'வென்டிலேட்டர்' களின் அவசியம் குறைவாகவே உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.