கடந்த, 2019 - 2020ம் நிதியாண்டில், அதற்கு முந்தைய ஆண்டைவிட, 61 கோடி ரூபாய் அதிக வருவாய் கிடைத்ததாக, அ.தி.மு.க., கூறியுள்ளது. அதே நேரத்தில், 38 கோடி ரூபாய் அதிக வருவாய் கிடைத்ததாக, தி.மு.க., தெரிவித்துள்ளது. கடந்த, 2019 - 2020ம் நிதியாண்டில், தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தாக்கல் செய்துள்ள கணக்கு தணிக்கை அறிக்கை அடிப்படையில், ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் ஆய்வு செய்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2019 - 2020ம் நிதியாண்டில் பெரும்பாலான கட்சிகளின் வருவாயில் பெரும்பகுதி, தேர்தல் பத்திரங்கள் மூலமே கிடைத்துள்ளன.
இந்த முறையில் கட்சிக்கு நன்கொடை அளிப்போரின் பெயர் ரகசியம் காக்கப்படும். அதனால், இந்த முறையில் நன்கொடை அளிப்பது, கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.ஜார்க்கண்டில் ஆளும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தன் நன்கொடை அறிக்கையில், 1 கோடி ரூபாயை, 'ஹிண்டால்கோ' என்ற நிறுவனம், தேர்தல் பத்திரம் மூலமாக வழங்கியதாக கூறியுள்ளது. ஆனால், கணக்கு தணிக்கை அறிக்கையில், அந்தத் தொகை காட்டப்படவில்லை.
எந்த நிறுவனம் நன்கொடை அளித்துள்ளது என்பது ரகசியம் காக்கப்படும் நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தகவலை வெளியிட்டுள்ளது. யார் நன்கொடை அளித்துள்ளனர் என்பது கட்சிகளுக்கு எப்படி தெரிய வருகிறது என்பது குறித்து ஆராயப்பட வேண்டும்.இரண்டு தேசிய கட்சிகள் மற்றும் 17 மாநிலக் கட்சிகள், 2019 - 2020ம் நிதியாண்டுக்கான கணக்கு தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்துள்ளன. அதில், தங்களுக்கு கிடைத்துள்ள மொத்த வருவாயில், 50 சதவீதம், தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்ததாக, அந்தக் கட்சிகள் கூறியுள்ளன.
கட்சிகள் மறைப்பு
இந்த, 19 கட்சிகளில், ஒன்பது கட்சிகள், முந்தைய ஆண்டைவிட வருவாய் குறைந்துள்ளதாக கூறியுள்ளன. ஒட்டுமொத்தமாக, இந்த, 19 கட்சிகளுக்கு, 2018 - 19ம் ஆண்டில், 772.14 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. அதுவே, 2019 - 2020ம் ஆண்டில், 619.28 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. கடந்த, 2019 - 2020ம் நிதியாண்டில், 3,429.56 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல்
பத்திரங்களை, கட்சிகள் பணமாக மாற்றியுள்ளன.அதன்படி பார்க்கையில், 3,117.19 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் குறித்து, கணக்கு தணிக்கை அறிக்கையில், இந்தக் கட்சிகள் குறிப்பிடாமல் மறைத்துள்ளன.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்.,குக்கு அதிகபட்சமாக, 143.676 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சிக்கு, 91.53 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளத்துக்கு, 90.35 கோடி ரூபாய் வருவாய்கிடைத்துள்ளது.முந்தைய ஆண்டைவிட, 61.506 கோடி ரூபாய் அதிக வருவாய் கிடைத்ததாக, தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க., கூறியுள்ளது. அதேபோல், முந்தைய ஆண்டை விட தங்களுக்கு, 38.557 கோடி ரூபாய் அதிக வருவாய் கிடைத்ததாக, தி.மு.க., கூறியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது