இந்திய பயணத்தை ரத்து செய்தார் போரிஸ் ஜான்சன்
19 Apr,2021
இந்திய குடியரசு தின விழாவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். இருப்பினும் பிரிட்டனில் கொரோனா வைரசின் 2வது அலை வீசியதால் அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து வரும் 25ம் தேதி போரிஸ் ஜான்சன் இந்தியா வருவார் என அறிவிக்கப்பட்டது. டெல்லி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்யும் அவர், தொழிலதிபர்களுடன் கலந்துரையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா வைரசின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அது மட்டுமின்றி இந்தியாவில் இரட்டை மரபணு மாற்றமடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து தொழிலாளர் கட்சியின் செயலாளர் ஸ்டீவ் ரீட் கூறுகையில், இந்தியாவுக்கு பயணிப்பதை விட காணொளிக் காட்சி மூலமாக சந்திப்புகளை நடத்தலாம் என்றார்.
இந்த யோசனை மற்றும் இந்தியாவில் உள்ள கொரோனா நிலவரத்தை பரிசீலனை செய்த போரிஸ் ஜான்சன், தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார்.
இந்தியாவில் தற்போதைய கொரோனா வைரஸ் சூழலில், பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த வாரம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள முடியாது என இரு நாட்டு அரசுகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
‘நேரடி சந்திப்புக்கு பதிலாக, பிரதமர்கள் மோடி மற்றும் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவார்கள். அப்போது பிரிட்டன் மற்றும் இந்தியா எதிர்காலத்தில் இணைந்து மேற்கொள்ளும் லட்சிய திட்டங்களை செயல்படுத்த ஒப்புக் கொண்டு தொடங்குவார்கள். இதைத் தாண்டி அவர்கள் வழக்கமான தொடர்பில் இருப்பார்கள். மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நேரில் சந்திக்க திட்டமிடுவார்கள்’ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் இரு நாடுகளிடையே காணொளி வாயிலாக கூட்டம் நடத்தப்பட உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது