ராய்ப்பூர் :சத்தீஸ்கரில் கொரோனாவால் மரணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனை பிணவறைகள், மயானங்கள் ஆகியவை, சடலங்களால் நிரம்பியுள்ளன.
சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாஹெல் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா இரண்டாவது அலை திடீரென வேகமாக பரவி, ஏராளமானோரை பலி வாங்கி வருகிறது.கடந்த, 12 நாட்களில், சத்தீஸ்கரில், 861 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
அவற்றில், 305 பேர், ராய்ப்பூரிலும், 213 பேர், துர்க் நகரிலும் இறந்து உள்ளனர். இதனால், ராய்பூரில் உள்ள அம்பேத்கர் அரசு மருத்துவமனையில், பிணவறைகள் நிரம்பி வழிகின்றன. பல உடல்கள் மருத்துவமனை வாசலில் கிடத்தப்பட்டுள்ள காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மயானங்களில், தினமும், காலை முதல் இரவு வரை, 100 சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. இது குறித்து, ராய்ப்பூர் மாநகராட்சி கூடுதல் ஆணையர், புலக் பட்டாச்சார்யா கூறியதாவது:திடீரென கொரோனா மீண்டும் பரவி, ஏராளமானோரை பலி வாங்கி வருகிறது. பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானார் ராய்ப்பூர் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பலனின்றி இறப்பதால், பிணவறையில் இடம் இல்லாத நிலைஏற்பட்டுள்ளது. அதனால், இரண்டு மயானங்களுக்குப் பதிலாக, 18 மயானங்களில் இறுதிச் சடங்குகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மயான மேடை சேதம்
குஜராத்திலும், கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஒரு வாரமாக, சூரத் நகரில் உள்ள இரு மின் மயானங்களில், தினமும், நுாற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள், இரவு பகலாக தொடர்ச்சியாக எரியூட்டப்பட்டு வருகின்றன. இதனால், மின் மயானங்களில் உடல்களைக் கிடத்தும் மேடைகளின் உலோகப் பட்டிகள் அதிக வெப்பத்தில் உருகி விட்டன. இதையடுத்து, பொறியாளர்கள் துணையுடன், புதிய மேடைகள் பொருத்தப்பட்டு, உடல் தகனம் நடக்கிறது