10 லட்ச ரூபாய்க்கு மகளை விற்ற தாய் - சேலத்தில்
13 Apr,2021
சேலத்தில் பெற்ற தாயே தனது மகளை விற்பனை செய்ததாக ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், பத்து லட்சத்துக்கு மகளை விற்று விட்டேன். இந்த பணத்தைக் கொண்டு சொந்தமாக வீடு கட்டி குடியேறப் போகிறேன்' என்று இரண்டு பெண்கள் பேசுகிறார்கள்.
இது குறித்து சேலம் நகர காவல்துறையில் விசாரித்த போது, சேலம் மாநகரப்பகுதியில் உள்ளது தாதகப்பட்டி பெருமாள் கோயில் மேடு. இங்கு வசிப்பவர் சின்னபொண்ணு. இவர் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் , 'பத்து லட்ச ரூபாய்க்கு என்னுடைய பேத்தியை விற்பனை செய்து விட்டாள் எனது மகள்' என்று புகார் தெரிவித்துள்ளார். சிறுமி விற்கப்பட்டது குறித்து சேலம் நகர மகளிர் காவல் நிலையத்தில் உள்ள காவல்துறையினர் விசாரித்து சிறுமியை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
தனது புகார் தொடர்பாக பேசிய சின்னபொண்ணு, " என்னுடைய பெண் சுமதியும், நானும் இஸ்திரி போடும் வேலை செய்து வந்தோம். சுமதிக்கு மூன்று குழந்தைகள். இதில் பத்து வயதிலும், ஏழு வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆறு வயதில் ஆண் மகனும் உள்ளார். சுமதி வீட்டுக்காரர் சதீஷ், கோழி இறைச்சிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இரண்டு வருடங்களாக என்னுடைய மகள் முல்லை நகரில் உள்ள கிருஷ்ணன் என்பவர் வீட்டில் வீட்டு வேலை செய்து வருகிறாள். அங்கு வீட்டு வேலைக்குச் செல்லும்போது மகள்களையும் உடன் அழைத்துச் செல்வாள். கடந்த சில மாதங்களாக இரண்டு மகள்களில் ஒரு மகளை கிருஷ்ணன் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்து விட்டாள். இது குறித்து கேட்டபோது முறையான பதில் எதுவும் சொல்வதில்லை. விசாரித்ததில் கிருஷ்ணனிடம் பேத்தியை விற்றுவிட்டதாகச் சொன்னாள். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். தற்போது பேத்தியை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். என்னுடைய பேத்தியை சுமதியுடன் அனுப்பக்கூடாது. அப்படி அனுப்பினால் மீண்டும் விற்று விடவே வாய்ப்புள்ளது. பேத்தியை மீட்டு என்னிடம் அனுப்பி வைக்க வேண்டும்" என்றார்.
சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் பழனியம்மாள், "பிள்ளையின் பெற்றோர், எங்கள் குழந்தையைக் கிருஷ்ணனிடம் தத்துக் கொடுக்க உள்ளோம் என்கிறார்கள். ஆனால், இது குறித்து சட்டபூர்வ நடைமுறையை அவர்கள் பின்பற்றவில்லை. எனவே கிருஷ்ணன், சுமதி, சதீஷ் ஆகிய மூன்று பேர் மீதும் குழந்தையைச் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சி செய்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளோம். குழந்தையிடமும், பெற்றோர்களிடம் விசாரித்து வருகிறோம். குழந்தைகள் ஏதேனும் பிரச்னையில் சிக்கிக்கொண்டால் "1098" என்ற அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டால் உடனடியாக உதவி வழங்கப்படும்" என்றார்.