உள்நாட்டு விமானங்களில் உணவு வினியோகிக்க தடை
13 Apr,2021
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இரண்டு மணிநேரத்திற்கும் குறைவான பயண நேரத்தை உடைய உள்நாட்டு விமானங்களில் உணவு வினியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பின் மே மாதம் உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. சர்வதேச விமானங்களுக்கான தடை இதுவரை 'வாபஸ்' பெறப்படவில்லை. எனினும் 'வந்தே பாரத்' திட்டம் மற்றும் ஒப்பந்தம் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு இடையே சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குறைந்த பயண நேரத்தை உடைய உள்நாட்டு விமானங்களில் உணவு வினியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய விமான போக்குவரத்துத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குறிப்பிட்ட சில உள்நாட்டு விமானங்களில் உணவு வினியோகம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. அதன்படி இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான பயண நேரத்தை உடைய விமானங்களில் உணவு வினியோகிக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.