கடன் கிடைக்காததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
11 Apr,2021
மதுரை தெப்பக்குளம் தேவிநகரை சேர்ந்தவர் காசிராஜன். இவரது மனைவி செல்வராணி (வயது 38). இவர்களது மகள் தாரணி (19).காசிராஜன் மனைவி, மகளை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செல்வராணி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இதற்கிடையில் தாரணிக்கு சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் அழகுக்கலை தொடர்பான படிப்புக்கு இடம் கிடைத்து ஆன்லைன் மூலம் படித்து வந்தார். அதற்கு கல்லூரி கட்டணம் சுமார் ரூ.5 லட்சம் செலுத்த வேண்டி இருந்தது. அவ்வளவு பெரிய தொகையை அவரது தாயாரால் ஏற்பாடு செய்து தர முடியவில்லை.எனவே தாரணி வங்கியில் கல்விக் கடன் வாங்கி தருவதாக தனியார் ஏஜென்சி செய்த விளம்பரத்தை பார்த்து அவர்களுக்கு போன் செய்தார். அவர்கள் கல்விக்கடன் வாங்கி தருவதற்கும், பல்வேறு ஆவணங்களை தயார் செய்வதற்கும் தாரணியிடம் இருந்து பல்வேறு தவணைகளில் 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் வாங்கினர். ஆனால் கடைசியில் தாரணிக்கு கல்வி கடன்
கிடைக்கவில்லை.
மாணவி தற்கொலை
இந்த நிலையில் கல்வி கடன் வாங்கி தருவதாக பணம் பெற்ற தனியார் ஏஜென்சியினரும் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என்று கூறி விட்டனர். இதனால் தாரணி கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்துள்ளார். மேலும் கல்லூரியில் இருந்து கட்டணத்தை செலுத்துமாறு கூறியுள்ளனர்.இதனால் மன வேதனையில் இருந்த தாரணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.