திருவொற்றியூர் தொகுதியில், 1 லட்சத்திற்கும் அதிகமானோர், ஓட்டளிக்காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, திருவொற்றியூர் தொகுதியில், 1 லட்சத்து, 55 ஆயிரத்து, 20 பெண்கள்; 1 லட்சத்து, 50 ஆயிரத்து, 803 ஆண்கள், மூன்றாம் பாலினத்தவர், 145 பேர் என, மொத்தம், 3 லட்சத்து, 5,968 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில், நட்சத்திர வேட்பாளரான நாம் தமிழர் கட்சியின் சீமான், தி.மு.க., கே.பி.சங்கர், அ.தி.மு.க., கே.குப்பன், ம.நீ.ம., மோகன், அ.ம.மு.க., சவுந்திரபாண்டியன் உட்பட, 20 வேட்பாளர்கள் களம் கண்டனர். ஆனால், திருவொற்றியூரில், எதிர்பார்த்த அளவிற்கு ஓட்டுகள் பதிவாகவில்லை, வெறும், 65 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பதிவாயின. இது கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன்படி, 99 ஆயிரத்து, 789 ஆண்கள்; 99 ஆயிரத்து, 193 பெண்கள்; 14 மூன்றாம் பாலினத்தவர் என, 1 லட்சத்து, 98 ஆயிரத்து, 996 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியதாக தெரிகிறது. ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும், ஓட்டுப்பதிவில், 66.17 சதவீதமும், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையில் அதிகம் இருப்பினும், ஓட்டு பதிவில், 64 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவர், 9.65 சதவீதம் பேர் மட்டுமே ஓட்டளித்துள்ளனர். இந்த தொகுதியில் மட்டும், 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள், அதாவது மூன்றில் ஒரு பங்கினர், தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற தவறியுள்ளனர்.
தேர்தல் ஆணையம் கவனித்து, ஓட்டு போடாதவர்களின் பெயர்களை அதிரடியாக பட்டியலில் இருந்து நீக்கினால் தான், மறுமுறை ஓட்டு போட வேண்டும் என்ற எண்ணம் வரும் என, சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு, 67.98 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.