கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக விமான நிலையங்களில் இன்று முதல் (வியாழக்கிழமை) கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. விதிகளை மீறினால் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து உள்ளது. கொரோனாவின் 2-வது அலை என்று இதனை கூறுகிறார்கள். தொற்று பரவுவதை தடுக்கும் பணியில் அனைத்து மாநிலங்களும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் விமான நிலையங்களிலும் இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. தொடக்கத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மீண்டும் முறையாக மேற்கொள்ள விமான நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள உத்தரவு வருமாறு:-
விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என தெரியவந்துள்ளது. எனவே, அனைத்து விமான நிலையங்களிலும் எல்லோரும் முககவசம் அணிகிறார்களா? சமூக விலகல் உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
விதிகளை மீறினால் அபராதம் விதித்தல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு உள்ளூர் போலீசாரின் உதவியை நாடலாம்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
இதைப்போல குறிப்பிட்ட சில விமான நிலையங்களும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளன. பெங்களூரு விமான நிலையத்துக்கு எந்த மாநிலத்தில் இருந்து சென்றாலும் ‘கொரோனா இல்லை’ என்ற சான்றிதழை விமான நிலையத்தில் கட்டாயம் காண்பிக்க வேண்டும். அதே நேரத்தில் கர்நாடகத்தின் பிற விமான நிலையங்களில் இந்த கட்டுப்பாடு இல்லை. இதைப்போல குஜராத் மாநிலத்தின் எந்த பகுதிக்கு விமானத்தில் சென்றாலும் ‘கொரோனா இல்லை’ என்ற சான்றிதழ் அவசியம் ஆகும்.
அதைப்போல டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள் அனைவருக்கும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
பரிசோதனையில் கொரோனா இருப்பது தெரியவந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தை பொறுத்தவரை தமிழகம், கேரளா, குஜராத், பஞ்சாப், சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், அரியானா மற்றும் மராட்டிய மாநிலங்களில் இருந்து செல்வோருக்கு ‘கொரோனா இல்லை’ என்ற சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. விமானம் தவிர பஸ், ரெயில்கள் மூலமாக சென்றாலும் அந்த சான்றிதழை காண்பிக்க வேண்டும்.
இப்படி குறிப்பிட்ட சில மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இதற்கிடையே, விமான கட்டணங்களும் இன்றுமுதல் சற்று உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.