எல்லை கடந்து மீன் பிடித்ததாக இந்திய மீனவர்கள் 54 பேர் சிறைபிடிப்பு; 5 படகுகள் பறிமுதல்
25 Mar,2021
இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே எல்லை கடந்து மீன்பிடிப்பதில் நீண்டகால பிரச்னை இருந்து வருகிறது. இந்திய மீனவர்கள் எல்லை கடந்து மீன்பிடிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர்.
இதனை தடுக்கவும், இரு நாட்டினரும் கடல் எல்லையினை சுமுக முறையில் பயன்படுத்தி கொள்ளவும் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில், இரட்டை மடிமீன் வலைகளை பயன்படுத்த கூடாது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுந்தாக்குதல்கள், சிறைபிடிப்பு மற்றும் இலங்கை அதிகாரிகளால் மீன்பிடி படகுகள், உபகரணங்களை பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகளை கைவிட கோருதல் உள்ளிட்ட முக்கிய விசயங்கள் இடம் பெற்றன.
எனினும், பேச்சுவார்த்தையில் உரிய பலன் எட்டப்படாத சூழலில் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபொழுது, எல்லை கடந்து மீன் பிடித்தனர் என கூறி இந்திய மீனவர்கள் 54 பேரை சிறை பிடித்து சென்றுள்ளனர். அவர்களில் 40 பேர் தமிழக மீனவர்கள். 14 பேர் காரைக்கால் மீனவர்கள் ஆவர். மீனவர்களிடம் இருந்து 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து சென்றுள்ளனர்.