மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி தஹாவூர் ராணாவை, இந்தியாவுக்கு நாடு கடத்த, அமெரிக்கா சம்மதித்து உள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையில், 2008ல், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஆறு அமெரிக்கர்கள் உட்பட, 166 பேர் கொல்லப் பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, அமெரிக்காவில் வசிக்கும்- பாகிஸ்தானியரான, லஷ்கர் பயங்கரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லிக்கு, 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த தாக்குதல் வழக்கில் தொடர்புடைய, டேவிட் ஹெட்லியின் நெருங்கிய நண்பரும், கனடா நாட்டு குடியுரிமை பெற்றுள்ள பாகிஸ்தானியருமான தஹாவூர் ராணாவும், அமெரிக்காவில் கைது செய்யப் பட்டார். ராணாவை, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த, மத்திய அரசு கோரிக்கை வைத்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை, லாஸ் ஏஞ்சலஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதி ஏஞ்சல்ஸ் ஜாக்குலின் கூலிஜன் முன்னிலையில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, அமெரிக்க அரசு சார்பில் ஆஜரான, துணை அட்டர்னி ஜெனரல் லுலிஜியான் கூறுகையில், ''இந்தியாவுக்கு ராணாவை நாடு கடத்துவதற்கு தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளன. அதனால், அவரை நாடு கடத்த உத்தரவிடலாம்,'' என்றார். இதையடுத்து, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.இது குறித்து, கூலிஜன் கூறியதாவது:
இந்தியா - அமெரிக்கா இடையே, குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தும், ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வழி செய்கிறது. அதனால், ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த, அடுத்த விசாரணையின் போது, நீதிபதி உத்தரவு பிறப்பிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.