மணலை திருடி ஆற்றை சாகடித்துவிட்டனர்: சீமான்
19 Mar,2021
தமிழகத்தில் இதுவரை ஆட்சி செய்தவர்கள் ஆற்று மணலை அள்ளி பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து ஆற்றை சாகடித்துவிட்டதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: இதுவரை ஆட்சி செய்தவர்கள் ஆற்று மணலை அள்ளி பிற மாநிலங்கள், பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து பல்லாயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து ஆற்றை சாகடித்துவிட்டனர். உலகிலேயே அதிகம் நீரை உறிஞ்சும் நாடு இந்தியா. இந்தியாவில் தமிழகம் தான் அதிகம் நீரை உறிஞ்சுகிறது. கல்வியை வியாபாரமாக்கியது மிகப்பெரிய அயோக்கியத்தனம்.
ஸ்டெர்லைட் ஆலையை திறந்துவைத்துவிட்டு இப்போது நாம் போராடும்போது நம்முடன் போராட வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்களை முன்கூட்டியே திட்டமிட்டே சுட்டுக்கொன்றுள்ளனர். தமிழக மீனவர்களை சுட்டுக்கொள்ளும் இலங்கையை நட்பு நாடு என இந்தியா மட்டுமே சொல்லி வருகிறது. பாகிஸ்தானியர்கள் எல்லைத்தாண்டி வந்தால் பயங்கரவாதம், இலங்கை கடற்படையினர் கடல் எல்லையை தாண்டி வந்து சுடுவது பயங்கரவாதம் இல்லையா?
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் கொடிகளில் மட்டுமே மாற்றம் இருக்கிறது. மற்ற அனைத்து கொள்கைகளும் ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் மாறுதல் வருவதில்லை. நாங்கள் கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகியவற்றை மட்டுமே இலவசமாக தருவோம். முதல்வர் என்பவர் அகில இந்திய புரோக்கர், பிரதமர் அகில உலக புரோக்கர். கைகட்டி நிற்பவனை நிமிர்ந்து பார்க்கவைக்க எங்களுக்கு ஓட்டளியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.