மனு தாக்கல் செய்ய வந்த பெண் தாதா எழிலரசி கைது
18 Mar,2021
பெண் தாதா எழிலரசி, காரைக்கால் திருப்பட்டினம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய காரில் வந்தபோது, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் திருப்பட்டினத்தை சேர்ந்த தொழில்அதிபர் ராமுவின் இரண்டாவது மனைவி எழிலரசி, 40. சில ஆண்டுகளுக்கு முன், ராமு கொலை செய்யப்பட்டார். கணவரை கொன்றவர்களை பழிதீர்க்க, தாதாவாக மாறினார் எழிலரசி.கூலிப்படையை ஏவி, ராமுவின் முதல் மனைவி வினோதா, முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் ஆகியோரை கொலை செய்த வழக்கில், எழிலரசி கைதானார்.
தொடர்ந்து அவர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பின், ஜாமினில் வெளிவந்தார்.முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கு, மதுக்கடை உரிமையாளரை மிரட்டி, கடையை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டது உள்ளிட்ட நான்கு வழக்குகளில், எழிலரசியை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்து, பிடிவாரன்ட் பிறப்பித்தது. தனிப்படை போலீசார், எழிலரசியை தேடி வந்தனர்.
இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன், பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் முன்னிலையில், எழிலரசி பா.ஜ.,வில் இணைந்தார். வரும் சட்டசபை தேர்தலில், திருப்பட்டினம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட, அவரது ஆதரவாளர்கள் பிரசாரம் செய்து வந்தனர்.இந்நிலையில் நேற்று, எழிலரசி வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக நாகூர் பகுதியில் இருந்து, காரில் வந்து கொண்டிருந்தார்.
இதையறிந்த போலீசார், காரைக்கால் - நாகூர் தேசிய நெடுஞ்சாலை, வாஞ்சூர் பகுதியில் காரை தடுத்து நிறுத்தி, எழிலரசியை கைது செய்தனர்.