கொரோனாவால் சுகாதார பணிகள் பாதிப்பு: இந்தியாவில் தாய், சேய் மரணம் அதிகரிக்கும் ஐ.நா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
18 Mar,2021
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய தெற்கு ஆசியாவில் கொரோனாவின் நேரடி மற்றும் மறைமுக தாக்கங்கள் குறித்து ஐ.நா.வின் யுனிசெப் உள்ளிட்ட அமைப்புகள் ஆய்வு மேற்கொண்டன. இந்த ஆய்வு மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த மாத நிலவரப்படி இந்த பிராந்தியத்தில் 1.20 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 1.09 கோடி பேர் இந்தியர்கள் ஆவர்.
கொரோனா காரணமாக சுகாதார சேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு உள்ளதால் பாலியல், இனப்பெருக்கம், தாய்-சேய் நலன், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் நலன் போன்றவற்றில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் மேற்படி வகையினரின் இறப்புகள் அதிகரிக்கும் எனவும் கண்டறியப்பட்டு உள்ளது.
அந்தவகையில் முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த 2020-ம் ஆண்டு தெற்கு ஆசியாவில் 2,28,641 குழந்தைகள் (5 வயதுக்கு உட்பட்டவர்கள்) அதிகமாக உயிரிழந்திருப்பார்கள் எனவும், இதில் அதிகபட்சமாக 1,54,020 பேர் இந்தியர்களாக இருபர் எனவும் மதிப்பிடப்பட்டு உள்ளது. இதைப்போல இந்தியாவில் தாய்மார் உயிரிழப்பு 18 சதவீதம் (7,750) அதிகரித்திருக்கும் எனவும் ஐ.நா.வின் அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.
வைரஸ் மற்றும் தொற்று பரவலின் போக்கு தற்போதைய நிலையிலேயே நீடித்தால் கடந்த அக்டோபர் முதல் வருகிற செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 4.90 லட்சத்துக்கு அதிகமானோர் உயிரிழப்பார்கள் எனவும், இந்தியா தனது பரிசோதனை மற்றும் சிகிச்சை வசதிகளை மேம்படுத்துவதற்காக சுமார் 1000 கோடி அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.70 ஆயிரம் கோடி) செலவிட வேண்டியிருக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது.