சாத்தான்குளம் இரட்டைக் கொலை – வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்குமாறு உத்தரவு
18 Mar,2021
ம் இரட்டைக் கொலை வழக்கின் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்குமாறு மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பணபலம், ஆள்பலத்தால் சாட்சிகளை அச்சுறுத்தி கலைக்க வாய்ப்புள்ளதால் வழக்கின் விசாரணையை முடிக்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி, பொலிஸாரின் விசாரணையின் போது மரணமடைந்த ஜெயராஜின் மனைவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனுவை விசாரித்த நீதிபதி முரளி சங்கர், வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்குமாறு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவருடை மகன் பென்னிக்ஸ் ஆகியோரை பொலிஸார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர்களின் உயிரிழப்புக்கு காரணமான 10 பொலிஸார் கைது செய்யப்பட்டு, சிபிசிஐடி விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டனர்.
அவர்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனாவால் இறந்ததையடுத்து, 9 பேரிடம் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தது.
அதனைத்தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணைகள் சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.