தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இம்முறை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வௌியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாகவும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில், சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டுமென தாம் தொடர்ந்தும் உணர்வுபூர்வமாக வலியுறுத்துவதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடந்த இனப்படுகொலை, வன்புணர்வு போன்ற கொடூரமான குற்றங்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிய நீதி கிடைக்கவும், குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைக்கவும் தமிழ் ஈழ மக்கள் சுதந்திரமாக வாழ தனி ஈழம் அமைந்திட அழுத்தம் கொடுப்பதாகவும் அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது புதிய சர்வதேச நடுநிலை சுதந்திரத் தீர்ப்பாயம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கும் மத்திய அரசுக்கும் அ.தி.மு.க தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அரசியல் கட்சியாக செயற்படுவது தொடர்பில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு உள்ள திட்டம் தொடர்பில் திரிபுரா மாநில முதலமைச்சர் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், பாரதிய ஜனதாக் கட்சி அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் இலங்கை தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இலங்கை அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்திற்கு அமைய, இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்களும் தேர்தலில் போட்டியிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் படி ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை கிடைக்க ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மத்திய அரசு மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அ.தி.மு.க தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு “இரட்டைக் குடியுரிமை” மற்றும் “குடியிருப்பு அனுமதி” வழங்க மத்திய அரசை வலியுறுத்துவதாகவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கைக்கான இந்திய உயர்தானிகர் கோபால் பாக்லே கடந்த வாரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை உயர்ஸ்தானிகர் சந்தித்ததுடன், இதன்போது 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம், மாகாண சபை முறை உள்ளிட்ட பல அரசியல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன், இந்திய உயர்ஸ்தானிகர் யாழ். பாதுகாப்பு சேவை தலைமையகத்திற்கு சென்று அங்கு கட்டளைத் தளபதியையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
திருகோணமலை கடல் மற்றும் சமுத்திர கல்வியற்கல்லூரிக்கு சென்று, அங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் இந்திய உயர்ஸ்தானிகர் வழங்கினார்.