தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சீமானின் ஆண்டு வருமானம் ஆயிரம் ரூபாயா? வேட்பு மனு தாக்கலில் குழப்பம் நடந்தது எப்படி?
17 Mar,2021
தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். இதையொட்டி கடந்த 15 ஆம் தேதி திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனுவில், சீமான் தனது சொத்துகள் குறித்த விவரத்தையும் உறுதிமொழி பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார். அதில், ` தனக்கு அசையும் சொத்தாக 31,06,500 ரூபாய் உள்ளதாகவும் அசையா சொத்து எதுவும் இல்லை' எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவருடைய மனைவிக்கு அசையும் சொத்தாக 63,25,031 ரூபாயும் அசையா சொத்தாக 25,30,000 ரூபாயும் உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இதுதவிர, கடந்த நான்கு ஆண்டுகளில் 65,500 ரூபாய் மட்டுமே வருமானம் வந்துள்ளதாகவும் 2019-2020 ஆம் ஆண்டுக்கான வருமானம் 1000 ரூபாய் மட்டுமே எனக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, ` சீமானின் ஆண்டு வருமானம் வெறும் ஆயிரம் ரூபாயா?' எனக் கேள்வியெழுப்பி, சமூக வலைதளங்களில் சிலர் மீம்ஸ்களை பதிவிட்டனர். இதனைக் கவனித்த நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் கொதிப்படைந்தனர்.
இந்நிலையில், வேட்பு மனுவை தாக்கல் செய்தபோது தட்டச்சு பிழையால் ஆண்டு வருமான கணக்கு தவறாக இடம்பெற்று விட்டதால் அதனைத் திருத்தி மீண்டும் ஒரு வேட்பு மனுவை சீமான் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது.
`உண்மையில் சீமானின் ஆண்டு வருமானம் 2,60,000 ரூபாய். இதற்காக அவர் கட்டிய வருமான வரியே ஆயிரம் ரூபாய்' எனவும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.