எச்1பி’ விசா தொடர்பான பாதகமான முடிவுகள் மறுபரிசீலனை செய்யப்படும்; ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் அறிவிப்பு
13 Mar,2021
இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் ‘எச்1பி’ விசா பெறுவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்.இதனால் ஆயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் புதிதாக ஆட்சிப் பொறுப்பைஏற்றுள்ள ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் முந்தைய நிர்வாகம் கொண்டுவந்த சர்ச்சைக்குரிய திட்டங்கள் மற்றும் கொள்கைகளை அதிரடியாக மாற்றியமைத்து வருகிறது.
அந்த வகையில் ’எச்1பி’ விசா தொடர்பான ஆட்சேபனைக்குரிய மற்றும் பாதகமான முடிவுகளை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கொரோனா ஊரடங்கு காலத்தில் எச்1பி விசா உள்பட வெளிநாட்டு பணியாளர்களுக்கான விசாக்களை ரத்து செய்து டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்த 3 கொள்கை முடிவுகளை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.