சென்னையில் கொரோனா பரவல் கட்டுக்குள்வரவில்லை. பொதுமக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வேகமாக பரவத் தொடங்கிய கொரோனா, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக முடக்கிப்போட்டது.
அடுத்தடுத்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் பலர் தங்களது வாழ்வாதாரங்களையும் இழந்தனர்.
கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. இதனால் இயல்புநிலை திரும்பி மக்கள் எப்போதும்போல நடமாடி வருகிறார்கள்.
இதற்கிடையே கொரோனா தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வந்தது. இதனால் முழுமையாக கொரோனா விலகி விடும் என்ற எதிர்பார்ப்பே மக்கள் மத்தியில் நிலவி வந்தது.
இந்தநிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக சென்னையில் ஆயிரக்கணக்கான தெருக்களில் கொரோனா வேகமாக பரவி வருவதாக திடுக்கிடும் தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்படி கொரோனா வைரஸ் அடங்காமல் மீண்டும் மிரட்டத் தொடங்கி இருப்பது பொதுமக்கள் மத்தியில் புதிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனால் அதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் பொது இடங்களில் கூட்டம், கூட்டமாக மக்கள் கூடிக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் ஜவுளி கடைகளில் திருவிழா போன்று கூட்டம் கூடுகிறது.
முககவசங்கள் அணிந்த பிறகே கடைகளுக்குள் அனுமதிக்கப்பட்ட பொதுமக்கள், தற்போது அதனை அணியாமலேயே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகளவில் நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பெருமளவு கூடிய கூட்டமே மீண்டும் கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளதாக சுகாதாரத்துறை கூறுகின்றனர்.
எனவே பொதுமக்கள் தங்களுக்குள் சுயக்கட் டுப்பாடுகளை விதித்துக் கொண்டு விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் பொது இடங்களிலும், மார்க்கெட்டுகளிலும் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் தினமும் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
கொரோனா பரவல் கட்டுக்குள்வரவில்லை என்றும், எனவே பொதுமக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கொரோனா நம்மை என்ன செய்யும்? என்கிற அலட்சியத்தோடு செயல்படாமல் முககவசம் அணிவதை இன்னும் சில மாதங்களுக்கு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் முககவசம் அணியும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதும், தனி மனித இடைவெளியை கடைபிடிப்பதும், சுகாதாரத்தை பேணுதலும் மட்டுமே கொரோனாவில் இருந்து காப்பதற்கான வழிகள் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை பொதுமக்களும் ஏற்றுக் கொண்டு செயல்பட்டால் மட்டுமே கொரோனா பிடியில் மீண்டும் சிக்காமல் தப்ப முடியும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.