தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா... இரண்டாவது அலை வீசும் அபாயம் - மருத்துவர்கள் எச்சரிக்கை
08 Mar,2021
தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியுள்ளது. சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இரண்டாவது அலை வீசும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கடந்த பல வாரங்களாக தமிழகத்தில் நாள்தோறும் புதிய தொற்று எண்ணிக்கை 500-க்கும் குறைவாகவும், சென்னையில் 200-க்கும் குறைவாகவும் இருந்து வந்த நிலையில், தற்போது கடந்த மூன்று நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் 500-ஐ தாண்டியுள்ளது.
அதன்படி, 5ம் தேதி 543 பேரும், 6ம் தேதி 562 பேர், நேற்று 567 பேரும் தொற்றுக்கு ஆளாகினர். இதனிடையே, தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,55,000-த்தை கடந்துள்ளது.
சென்னையில் உள்ள 36,000தெருக்களில் சுமார் ஆயிரம் தெருக்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகள், கோயில் விழாக்கள், சமய சடங்குகளில் பங்குபெறுவோரில் குடும்பமாக தொற்றுக்குக்கு ஆளாவதும், கடந்த இரண்டு வாரங்களில் 209 குடும்பங்களில் 409 பேருக்கு தொற்று உறுதியானதும் தெரியவந்துள்ளது.
சென்னை தவிர்த்து, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, திருப்பூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரண்டாவது அலை வீசும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.